700 ஆண்டு தொன்மையான குலசேகரமுடையார் சிவன்கோயில் பஞ்சலோக நடராஜர் சிலை 
தமிழ்நாடு

700 ஆண்டுகள் தொன்மையான நடராஜர் சிலை: 37 ஆண்டுகளுக்குப் பின்  மீட்பு

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் உள்ள கோயிலில் இருந்து 37 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன,  700 ஆண்டுகள் பழைமைவாய்ந்த நடராஜர் சிலையை சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு விசாரணைக் குழுவினர்

DIN


திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் உள்ள கோயிலில் இருந்து 37 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன,  700 ஆண்டுகள் பழைமைவாய்ந்த நடராஜர் சிலையை சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு விசாரணைக் குழுவினர் மீட்டுள்ளனர்.

கல்லிடைக்குறிச்சியில் அருள்மிகு குலசேகரமுடையார் உடனுறை அறம்வளர்த்தநாயகி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் மன்னர் குலசேகர பாண்டியனால் கடந்த 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்தக் கோயிலில் இருந்த நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் மற்றும் திருவில்லி விநாயகர் சிலைகள் கடந்த 1982-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி திருடு போயின.இதுதொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

ஆனால், இந்த வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததை அடுத்து கடந்த 1984-ஆம் ஆண்டு  வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
சிலை மீட்பு: சிலைக் கடத்தல் தொடர்பாக விசாரிக்கும்  உயர்நீதிமன்ற சிறப்பு விசாரணைக் குழுத் தலைவர் பொன் மாணிக்கவேல் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  ராஜாராம், துணைக் கண்காணிப்பாளர் மலைச்சாமி ஆகியோர் கொண்ட அதிகாரிகள்  இந்த வழக்கை மீண்டும் எடுத்து விசாரித்தனர்.

அதில், திருடப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவின் அடிலைடு நகரில் உள்ள ஏஜிஎஸ்ஏ  அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தொல்லியல் துறை நிபுணர் நாகசாமி உள்ளிட்டோரின் உதவியுடன் இந்தச் சிலை கல்லிடைக்குறிச்சி அருள்மிகு குலசேகமுடையார் உடனுறை அறம்வளர்த்தநாயகி அம்மன் கோயிலுடையது என்பது ஆதாரங்களின் அடிப்படையில் ஆஸ்திரேலியா அரசிடம் நிரூபிக்கப்பட்டது. 
இந்தியத் தூதரக அதிகாரிகள் உதவியுடன் ஏஜிஎஸ்ஏ அருங்காட்சியக அதிகாரிகளிடம் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அச்சிûலையை ஒப்படைக்க அவர்கள் ஒப்புக் கொண்டனர். தொடர்ந்து,  ஆஸ்திரேலியா சென்ற உயர்நீதிமன்ற சிறப்பு விசாரணைக் குழுவிடம் நடராஜர் சிலை புதன்கிழமை 
ஒப்படைக்கப்பட்டது.

செப். 13-இல் சென்னை வருகை:  இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் கூறுகையில், 37 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட 700 ஆண்டுகள் தொன்மையான நடராஜர் சிலையின் தற்போதைய மதிப்பு ரூ. 30 கோடியாகும். இந்தச் சிலை தில்லிக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து  ரயில் மூலம் சென்னைக்கு வெள்ளிக்கிழமை காலை (செப். 13) கொண்டு வரப்பட உள்ளது. 
அதன் பின், சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணம் கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் நடராஜர் சிலை ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கல்லிடைக்குறிச்சி அருள்மிகு குலசேகமுடையார் உடனுறை அறம்வளர்த்தநாயகி அம்மன் கோயிலில் வழிபாட்டுக்கு வைக்கப்படும் என்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT