தமிழ்நாடு

மின் இணைப்பு-டிஜிட்டல் மீட்டர் கட்டணம் உயர்கிறது: உத்தேச விவரங்கள் இணையத்தில் வெளியீடு

DIN


புதிய மின் இணைப்பு, டிஜிட்டல் மீட்டர் ஆகியவற்றுக்கான கட்டணங்களை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நடத்தி வருகிறது.
முன்னதாக, தமிழ்நாடு மின்சார வாரியம் பரிந்துரைத்துள்ள கட்டண விவரங்கள் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதேவேளையில் தமிழகத்தில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என்று மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி உறுதிபட அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், மின் கட்டணம் இல்லாத பிற பிரிவுகளுக்கான கட்டணத்தை மாற்றியமைக்க மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக பொது மக்களின் கருத்துகளை அறியவும் தீர்மானித்துள்ளது. கருத்துக் கேட்புக் கூட்டம் தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் இணைப்புக் கட்டணம், பிணை வைப்புத் தொகை, மின் அளவீட்டுக் கருவியின் வாடகை, மின் அளவீட்டுக் கருவி மீதான வைப்புத் தொகை, மறு இணைப்புக் கட்டணம், மேம்பாட்டுக் கட்டணம் போன்ற பல்வேறு வகையான பிரிவுகளில் இப்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணங்களை மாற்றியமைக்க மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்சார வாரியம் மனு தாக்கல் செய்துள்ளது. இந்தக் கட்டண விகிதங்கள் கடந்த 2004-ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இப்போது மின்சார வாரியம் தாக்கல் செய்துள்ள கோரிக்கை மனுவில் அந்தக் கட்டண விகிதங்களை மாற்றியமைக்க கேட்டுக் கொண்டுள்ளது.
இணையதளத்தில் பதிவேற்றம்: இதுகுறித்த மனுவானது கடந்த ஆண்டு ஏப்ரலில் மின்சார வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதுகுறித்து கருத்துத் தெரிவிக்கவும் பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். அதற்கு 12 பேர் தங்களுடைய ஆட்சேபனைகள், கருத்துகளைத் தெரிவித்தனர். அந்த 12 பேருக்கும் தனித்தனியே விளக்கத்தை மின்சார வாரியம் அளித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, பலவகைப் பிரிவுகளுக்கான கட்டணங்களை மாற்றி அமைப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் திட்டமிட்டுள்ளது.  கட்டணங்களை மாற்றியமைப்பதற்கான பட்டியலும் www.tnerc.gov.in, www.tangedco.gov.in  ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. பொது மக்களின் கருத்துகளை அறியும் கூட்டமானது வரும் 25-ஆம் தேதியன்று சென்னை தியாகராய நகரிலுள்ள வாணிமகாலில் காலை 11 மணி முதல் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT