தமிழ்நாடு

ரயில்களை தனியார்மயமாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா? ராமதாஸ் கண்டனம்

DIN

ரயில்களை தனியார்மயமாக்கக் கூடாது. அவ்வாறு செய்தால், ஏழைகளுக்கு ரயில் பயணம் எட்டாக்கனியாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 

இந்தியாவில் அதிகம் பேர் பயணிக்கும் ரயில்வே வழித்தடங்களை தனியாருக்கு தாரை வார்க்க  மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. ஏழை மக்களின் நலனில் அக்கறையற்ற, தனியார் நிறுவனங்களின் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட இந்த முடிவு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

தமிழ்நாட்டில்  ரயில் சேவைகளை வழங்கும் தெற்கு ரயில்வேத் துறை உள்ளிட்ட மொத்தம் 6 ரயில் மண்டலங்களின் தலைமை இயக்க மேலாளர்களுக்கு இந்திய ரயில்வே வாரியம் அனுப்பியுள்ள 23.09.2019 தேதியிட்ட சுற்றறிக்கையில் தான் ரயில்களை தனியார்மயமாக்குவது  குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையிலிருந்து மதுரை, கோவை, பெங்களூர், தில்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களுக்கு செல்லும் வழித்தடங்கள் உள்ளிட்ட 150 வழித்தடங்களை அடையாளம் கண்டுள்ள ரயில்வே வாரியம், அவற்றில் எந்தெந்த வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்க அனுமதிக்கலாம் என்பது குறித்த கருத்துகளை தெரிவிக்கும்படி மண்டல ரயில்வேத்துறை நிர்வாகங்களைக் கேட்டிருக்கிறது. 

இதுகுறித்து இறுதி முடிவெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம்  நாளை மறுநாள் காலை 11.00 மணிக்கு தில்லியில் நடைபெறும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தில்லியில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பெறப்படும் ஆலோசனைகளின் அடிப்படையில் ஒப்பந்தப்புள்ளிகள் தயாரிக்கப்பட்டு, ரயில் வழித்தடங்கள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது. ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் நலன் சார்ந்த கோணத்தில் பார்க்கும் போது இது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். இது இந்தியாவின் முக்கியமான போக்குவரத்து முறையை தலைகீழாக சிதைக்கும் நோக்கம் கொண்டதாகவே அமையும். ரயில்ப் பாதைகளை தனியாரிடம் ஒப்படைப்பதன் மூலம் அவர்கள் பயணிகளின் தேவைக்கு ஏற்ப அதிக எண்ணிக்கையில் ரயில்களை இயக்குவார்கள்; மணிக்கு 160 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும்; நவீன வசதிகள் கொண்ட ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்; இதனால் பயணிகள் மிகவும் விரைவாகவும், மகிழ்ச்சியாகவும் பயணிக்க முடியும் என்று ரயில்வே வாரியம் கூறியுள்ளது.

மேலோட்டமாகவும், மேட்டுக்குடி மக்களின் கோணத்திலிருந்தும் பார்க்கும் போது இவை உண்மை தான் என்பதை மறுக்க முடியாது. ரயில்களை தனியார்மயமாக்குவதால் ஏற்படும் நேர்மறையான பயன்களை கூறியுள்ள ரயில்வே வாரியம், எதிர்மறையான விளைவுகளை மறைக்க முயன்றிருக்கிறது. தனியார் ரயில்கள் இயக்கப்பட்டால் அவற்றின் பயணக்கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படும். இப்போது வசூலிக்கப்படும் பயணிகள் கட்டணத்தில் சராசரியாக 47% மானியமாக வழங்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் ரூ.42,000 கோடி இழப்பை, சரக்குப் போக்குவரத்தில் கிடைக்கும் லாபத்திலிருந்து தான் ரயில்வேத்துறை ஓரளவு சமாளிக்கிறது. தனியார் ரயில்கள் இயக்கப்படும் போது இந்த ரூ.42,000 இழப்பும் பயணிகள் தலையில் சுமத்தப்படும். இதற்காக ரயில்வேக் கட்டணம் 28% முதல் 244% வரை உயர்த்தப்படும். இந்த உயர்வை அடித்தட்டு மக்களால் தாங்க முடியாது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பேருந்துக் கட்டணத்தை விட ரயில்வேக்கட்டணம் குறைவாக உள்ளது. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் இன்னும் கட்டணம் குறைவு என்பதால், அவை ஏழைகளிலும் ஏழைகளுக்கு வரப்பிரசாதமாக உள்ளன. தனியார் ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இருக்காது என்பதாலும், சாதாரண வகுப்புக் கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்படும் என்பதாலும் ஏழைகளுக்கு ரயில் பயணம் என்பது எட்டாக்கனியாகி விடும். சென்னை, மும்பை, கொல்கத்தா, செகந்திராபாத் ஆகிய நகரங்களின் புறநகர் ரயில்களும் தனியார்மயமாக்கப்படும் என்பதால் குறைந்த கட்டணத்தில் புறநகர் ரயில்கள் மூலம் அன்றாடம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். புறநகர் ரயில் கட்டணங்களில் 66% மானியம் வழங்கப்பட்டு வருவதால், அவை தனியார்மயமாக்கப்படும் போது 3 மடங்கு அளவுக்கு கட்டணம் உயர்த்தப்படும். மாதாந்திர பயணச்சீட்டு முறையும் ஒழிக்கப்படும் என்பதால் புறநகர் ரயில்களில் பயணிப்பவர்கள் மாதம் ரூ.2000 வரை கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும்.

அதுமட்டுமின்றி, நூற்றுக்கணக்கான ரயில்கள் தனியார்மயமாக்கப்படுவதால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை உருவாகும் அல்லது அந்த பணியிடங்கள் ஒழிக்கப்படக்கூடும்.  இவை எதுவுமே ரயில்த்துறையின் வளர்ச்சிக்கோ, மக்களின் முன்னேற்றத்திற்கோ வழிவகுக்காது.

நாடாளுமன்ற மக்களவையில் கடந்த ஜூலை 12-ஆம் தேதி ரயில்வேத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், ரயில்வேத்துறை ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது என்று உத்தரவாதம் அளித்திருந்தார். அவ்வாறு உத்தரவாதம் அளித்து 75 நாட்கள் கூட ஆகாத நிலையில் ரயில்களை தனியார்மயமாக்கத் துடிப்பது நியாயம் அல்ல.  ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு ரயில்களை தனியார்மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவேக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக்

ரஷியா வசம் மேலும் ஓா் உக்ரைன் கிராமம்

விண்வெளியில் அணு ஆயுதங்களுக்குத் தடை: ஐ.நா.வில் ரஷியா புதிய தீா்மானம் தாக்கல்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை: உச்சநீதிமன்றத்தில் தகவல்

கடையநல்லூரில் மே தின பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT