தமிழ்நாடு

திருவனந்தபுரம் நவராத்திரி பூஜை: தேவாரகெட்டு சரஸ்வதி அம்மன் யானை மீது புறப்பாடு

DIN

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ள நவராத்திரி பூஜையில் பங்கேற்பதற்காக, பத்மநாபபுரம் அரண்மனை வளாகத்திலிருந்து தேவாரகெட்டு சரஸ்வதி அம்மன் யானை மீது புறப்படும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையடுத்து, அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி ஆகிய சுவாமிகளை கேரள அமைச்சர்கள் வழியனுப்பி வைத்தனர்.

திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜையில் பங்கேற்க திருவிதாங்கூர்  மன்னர் காலத்திலிருந்தே  மன்னரின் உடைவாளை  முன்னே ஏந்திச் செல்ல, கம்பர் பூஜித்த பத்மநாபபுரம் தேவாரகெட்டு சரஸ்வதி அம்மன், முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் குமாரசுவாமி ஆகிய சுவாமிகள் பத்மநாபபுரத்திலிருந்து பவனியாக செல்வது வழக்கம். அதன்படி நிகழாண்டு, தேவாரகெட்டு சரஸ்வதி அம்மன் புறப்பாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, பத்மநாபபுரம் அரண்மனை உப்பரிகை மாளிகையில் மன்னரின் உடைவாளை எடுத்துக் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பூஜையில் வைக்கப்பட்ட  வாளை கேரள தேவஸம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், கன்னியாகுமரி மாவட்ட தேவஸம் போர்டு இணை ஆணையர் அன்புமணியிடம் கொடுக்க, அவர் குமாரகோவில் மேலாளர் மோகனகுமாரிடம் கொடுக்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. இவர், சரஸ்வதி அம்மன் பவனிக்கு முன் உடைவாளை எடுத்துச் செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவ்விழா, இரு மாநில மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் விழாவாக காலங்காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நிகழ்ச்சியில், கேரள தொல்லியல் துறை அமைச்சர் கடனபள்ளி ராமச்சந்திரன், திருவிதாங்கூர் தேவஸம் போர்டு தலைவர் பத்மகுமார், தொல்லியல் துறை இயக்குநர் சோனா, அரண்மனைக் கண்காணிப்பாளர் அஜித்குமார், கோவளம் எம்எல்ஏ வின்சென்ட்,  கேரள ரூரல் எஸ்.பி. அசோக்,  குமரி மாவட்ட நீதிபதி கோமதிநாயகம், கூடுதல் ஆட்சியர் ராகுல்நாத், பத்மநாபபுரம் சார்ஆட்சியர் சரண்யா அரி, குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்,  நகராட்சி ஆணையர் மூர்த்தி, அரசு அலுவலர்கள்,  கேரள மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

வாள் எடுத்துக் கொடுக்கும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, பத்மநாபபுரம் அரண்மனை பின்புற வளாகத்தில் உள்ள கம்பன் பூஜித்த தேவாரகெட்டில் அருள்பாலிக்கும் சரஸ்வதி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.  சரஸ்வதி அம்மன் வெளியே வந்தபோது தமிழக - கேரள காவல் துறையினர் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து, நெற்றிப்பட்டம் சூட்டப்பட்ட யானை மீது சரஸ்வதி அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மனின் இருபுறமும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் குமாரசுவாமி, முன்னுதித்த நங்கை அம்மன் அமர சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது பெண்களும், சிறார்களும் கேரளப் பாரம்பரிய உடையணிந்து மலர்களை வழிநெடுகிலும் இட்டுச் செல்ல, இப்பவனி கணபதி கோயில் வழியாக அரண்மனையை அடைந்தது. 

சரஸ்வதி அம்மனுக்கு அரண்மனை சார்பில் பூஜை நடத்தப்பட்டு, பிடி காணிக்கை கொடுக்கும்  நிகழ்ச்சியும், பின்னர்,  அரண்மனை வளாகத்தில் இரு மாநில காவல் துறையினர் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும், அதையடுத்து, அம்மன் திருவனந்தபுரம் புறப்படும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

வழிநெடுகிலும் மக்கள் தங்களது வீடுகளின் முன் விளக்கேற்றி, பழங்கள்-காய்கனிகள் வைத்து பூஜை செய்தனர். நிகழ்ச்சியில், மழையையும் பொருள்படுத்தாமல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளாக பெண்கள், ஊர்மக்கள் பங்கேற்றனர். 

அம்மன் பவனி வியாழக்கிழமை இரவு குழித்துறை மகாதேவர் கோயிலை அடைந்தது. அங்கிருந்து வெள்ளிக்கிழமை (செப். 27) காலை  பவனி புறப்பட்டு களியக்காவிளை வழியாக சனிக்கிழமை இரவு திருவனந்தபுரத்தை அடைகிறது.

அம்மன் பவனியையொட்டி தக்கலை, மேட்டுக்கடை, கேரளபுரம், திருவிதாங்கோடு, அழகியமண்டபம் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

திருவனந்தபுரம் நவராத்திரி பூஜையில் பங்கேற்பதற்காக, பத்மநாபபுரம் அரண்மனை வளாகத்திலிருந்து முத்துக்குடை பிடிக்கப்பட்ட யானை மீது பவனியாக செல்லும் சரஸ்வதி அம்மன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT