தமிழ்நாடு

98 அரசு கலை-அறிவியல் கல்லூரிகளை கண்காணிக்க ஏற்பாடு

எம்.​ மார்க் நெல்​சன்

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் தினமும் என்ன நடக்கிறது என்பதை அதிகாரிகள் சென்னையில் இருந்தபடி கண்காணிக்க புதிய ஏற்பாடு செய்யப்படுகிறது.

இந்தப் புதிய ஏற்பாடு ஓராண்டில் நடைமுறைக்கு வர உள்ளது. அவ்வப்போது அரசு கல்லூரிகளில் நடைபெறும் மாணவர்கள் ரகளை, போராட்டம், ஆசிரியர்கள், பிற ஊழியர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் இந்தப் புதிய ஏற்பாடு செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் 91 அரசு கலை-அறிவியல் கல்லூரிகள், 7 அரசு பி.எட். கல்லூரிகள் என மொத்தம் 98 கல்லூரிகள் கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்தின் கீழ் இயங்கி வருகின்றன.

இவற்றில் சென்னையில் மாநிலக் கல்லூரி, நந்தனம் கலைக் கல்லூரி போன்ற சில கல்லூரி மாணவர்கள் ரகளையில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட கல்லூரிகள் கண்காணிப்பு கேமரா பொருத்துவது உள்பட பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வந்தன. ஆனால், அதன் பிறகும் மாணவர்கள் ரகளை தொடர்கதையாகி வருகிறது.

அதுபோல, அரசு கல்லூரிப் பேராசிரியர்கள் சிலர் முறையாக பணிக்கு வருவதில்லை எனவும், வகுப்புகளுக்கு தினமும் செல்வதில்லை என்ற புகாரும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில், அனைத்து கல்லூரிகளிலும் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்தி, அதன் மூலம் தொடர் கண்காணிப்பை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாட்டை கல்லூரி கல்வி இயக்குநரகம் செய்து வருகிறது.

அதன்படி, இதுவரை கண்காணிப்புக் கேமரா பொருத்தப்படாத அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் உடனடியாக கேமராக்களைப் பொருத்தவும், ஏற்கெனவே பொருத்தப்பட்டுள்ள கல்லூரிகளில் உரிய எண்ணிக்கையில் கண்காணிப்புக் கேமராக்கள் இருப்பதை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்காக அனைத்து அரசு கலை-அறிவியல் கல்லூரிகளிலும் கள ஆய்வு மேற்கொண்டு, எந்தெந்த இடங்களில் கேமரா பொருத்தப்பட வேண்டும் என்பதை முடிவு செய்ய சிக்மா தொழில்நுட்ப இந்தியா நிறுவனம், நேஷனல் ஸ்மால் இன்டஸ்ட்ரீஸ்  ஆகிய இரு தனியார் நிறுவனங்ளும் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்த நிறுவனங்கள் கள ஆய்வுக்கு வரும்போது, அவர்களை கல்லூரிக்குள் அனுமதித்து, அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருமாறு அனைத்து அரசு கலை-அறிவியல் கல்லூரிகளையும் கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இவ்வாறு அனைத்து கல்லூரிகளிலும் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்ட பின்னர், அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, சென்னையில் இயக்குநர் அலுவலகத்தில் அமைக்கப்படும் பெரிய எல்.இ.டி. திரையுடன் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளன.

இந்தத் திட்டத்தை கல்வியாளர்கள் வரவேற்றுள்ளனர். மாணவர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதால், அரசு கல்லூரிகள் இனி முறையாக நடைபெறுவதை உறுதிப்படுத்த முடியும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநர் (பொறுப்பு) ஜோதி வெங்கடேஸ்வரன் கூறியது:

மாணவர்களையும், ஆசிரியர்களையும், கல்லூரி வளாகத்தையும் தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் இந்த புதிய ஏற்பாடு செய்யப்படுகிறது.

98 அரசு கல்லூரிகளில் பொருத்தப்படும் கேமராக்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, சென்னையில் கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்தில் இயக்குநர் அறை, இணை இயக்குநர் அறைகளில் பொருத்தப்படும் பெரிய எல்.இ.டி. திரையுடன் இணைக்கப்பட்டு விடும்.

அதன் மூலம் ஒவ்வொரு அரசு கல்லூரியும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, கல்லூரிகள் தினமும் சுமுகமாக நடைபெறுவது உறுதிப்படுத்தப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT