மதுபோதையில் கார் ஓட்டிய நடிகர் மீது வழக்கு
சென்னை சூளைமேட்டில் மதுபோதையில் காரை ஓட்டி வந்து மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளாக்கியதாக நடிகர் சக்தி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
சென்னை சூளைமேட்டில் மதுபோதையில் காரை ஓட்டி வந்து மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளாக்கியதாக நடிகர் சக்தி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இயக்குநர் பி.வாசுவின் மகன் நடிகர் சக்தி. இவர் தொட்டால் பூ மலரும், நினைத்தாலே இனிக்கும், சிவலிங்கா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சக்தி, செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு சென்னை சூளைமேடு இளங்கோவடிகள் தெருவில் செல்லும்போது, அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த செல்வநாதன் (45) என்பவர் காரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு, காரை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதை கவனித்து அதிர்ச்சியடைந்த அந்தப் பகுதி மக்கள், சக்தியின் காரை தடுத்து நிறுத்தினர். பின்னர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் விபத்தை ஏற்படுத்திய சக்தியின் காரை பறிமுதல் செய்தனர்.
மேலும் மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக சக்தி மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர். பின்னர் சொந்த ஜாமீனில் அவரை விடுவித்தனர்.