முகப்பு
தமிழ்நாடு

நெல்லைக்கு 1000 விரைவு பரிசோதனை கருவிகள் வருகை: கரோனா பரிசோதனை தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டத்தில் விரைவு பரிசோதனை கருவிகளைக் கொண்டு கரோனா பரிசோதனை செய்யும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:28 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் விரைவு பரிசோதனை கருவிகளைக் கொண்டு கரோனா பரிசோதனை செய்யும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதற்காக 1000 விரைவு பரிசோதனை கருவிகளை தமிழக அரசு வழங்கியுள்ளது.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 60 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 22 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர். 38 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் கண்காணிப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் கரோனா துரித பரிசோதனைக்காக சீனாவில் இருந்து விரைவு பரிசோதனை கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அதன்படி முதன்முதலில் சேலத்தில் இப் பரிசோதனை தொடங்கி வைக்கப்பட்டது.  திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா துரித பரிசோதனை மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. 

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பரிசோதனையைத் தொடங்கி வைத்த பின்பு செய்தியாளர்களிடம் கூறியது: கரோனா நோய்த் தொற்று காரணமாக மேலப்பாளையம், கோடீஸ்வரன்நகர், களக்காடு, பத்தமடை, வள்ளியூர், கிருஷ்ணாபுரம், கே.டி.சி.நகர், டார்லிங் நகர் ஆகிய பகுதிகள் கண்காணிப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே நோய்த்தொற்று பாதிக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்கள், தொடர்பில் இருந்தவர்கள் என மொத்தம் 1200-க்கும் மேற்பட்டோருக்கு பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா துரித பரிசோதனைக்காக மொத்தம் 1000 விரைவு பரிசோதனை கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்தத் துரித பரிசோதனையின் மூலம் 20 நிமிடங்களிலேயே கரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பது குறித்து அறிய முடியும். அதன்பின்பு பி.சி.ஆர். பரிசோதனைக்கு அந்த நபர் உள்படுத்தப்படுவார். அதேபோல கரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருவோருக்கு அடுத்தடுத்த பி.சி.ஆர். பரிசோதனைக்கு முன்பாக விரைவு பரிசோதனை கருவியில் பரிசோதனை செய்யும்போது காலவிரயம் ஏற்படாமல் தடுக்கப்படும். திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விரைவு பரிசோதனை கருவிகள் பிரித்து அனுப்பி வைக்கப்பட உள்ளது. கரோனா அறிகுறி உள்ளவர்களுக்குதான் முதல்கட்டமாக இந்தப் பரிசோதனை செய்யப்படும். 

கூடுதலாக கருவிகள் வந்ததும் நோயாளிகளின் உறவினர்கள் மட்டுமன்றி அந்தப் பகுதியில் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் விநியோகிப்பவர்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் உள்ளிட்டோருக்கும் கரோனா துரித பரிசோதனை செய்ய திடடமிடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 4 நடமாடும் மருத்துவக் குழு மூலம் சளி, ரத்தம் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. 3500 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர் என்றார் அவர். தொடக்க நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணன், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கண்ணன், மாநகர நல அலுவலர் சத்தீஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →