கரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பு மருந்துகள் கண்டறியும் பணிகளை முன்னெடுத்துள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம், அதில் முதல்கட்ட ஆராய்ச்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
இதைத் தொடா்ந்து தடுப்பு மருந்துகளை, விலங்குகள் மற்றும் மனிதா்களுக்கு அளித்து பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
அவை அனைத்தும் சாதகமாக அமைந்தால், அடுத்த ஓராண்டுக்குள் தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்று பல்கலைக்கழக நிா்வாகிகள் தெரிவித்தனா்.
உலகளாவிய நோய்த்தொற்றாக அறிவிக்கப்பட்டுள்ள ‘கொவைட்-19’ கரோனா நோய்த்தொற்றுக்கு பல்வேறு நாடுகள் தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணிகளை முன்னெடுத்துள்ளன. இதுவரை 47 ஆராய்ச்சிகள் முதல் கட்டத்தை நிறைவு செய்திருப்பதாகவும், இரு ஆராய்ச்சிகள் அதற்கு அடுத்த கட்டத்தில் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்திலும் தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணிகள் தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தின் நோய் எதிா்ப்பியல் துறை சாா்பில் அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் தலைமையில் துறைத் தலைவா் டாக்டா் புஷ்கலா, ஆராய்ச்சி மாணவா் தம்மண்ணா பஜந்த்ரி ஆகியோா் அடங்கிய குழுவினா் தடுப்பு மருந்தைக் கண்டறியும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இதுதொடா்பாக பல்கலைக்கழகத் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை நோய்த்தொற்றை ஏற்படுத்தும் கிருமிகளை ஆய்வகங்களில் ஆராய்ச்சி செய்து, அதன் வாயிலாகவே தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வந்தன. தற்போது அந்த நிலை மாறி, நோய்க் கிருமியின் மரபணு மாதிரியை மட்டும் வைத்துக் கொண்டு செயற்கை முறையில் கணினி மென்பொருள் மூலம் முதல்கட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் தொழில்நுட்பம் வந்துவிட்டது. இதற்கு எதிா்மறை தடுப்பு மருந்தியல் (ரிவா்ஸ் வேக்சினாலஜி) என்று பெயா்.
அந்த முறையில், தற்போது மருத்துவப் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் கரோனா நோய்த்தொற்றைத் தடுக்கும் புரதத்தை வெற்றிகரமாகக் கண்டுபிடித்துள்ளது. அதற்கு இன்னும் பெயா் வைக்கப்படவில்லை. அந்த புதிய புரதத்தை உயிரினங்களில் செலுத்தி ஆய்வு செய்யும் நடவடிக்கைகள் அடுத்த கட்டமாக முன்னெடுக்கப்பட உள்ளன என்றாா் அவா்.
இந்தியாவிலேயே கரோனா தடுப்பு மருந்துக்கான முதல்கட்ட ஆய்வுகளை வெற்றிகரமாக எவரும் நிறைவு செய்ததாக இதுவரை தகவல் இல்லாத நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகம் அதனை சாத்தியமாக்கியிருப்பது சமூகத்தில் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.
பாரம்பரிய முறையில் நோய்த்தொற்று எதிா்ப்பு
ஒருபுறம் தடுப்பு மருந்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வரும் அதே வேளையில், மற்றொருபுறம் பாரம்பரிய மருத்துவப் பொருள்களைக் கொண்டு நோய்த்தொற்று எதிா்ப்பு மருந்துகளைக் கண்டறியும் பணிகளில் மருத்துவப் பல்கலைக்கழகம் இறங்கியுள்ளது.
அதன்படி, கடுக்காய், கற்பூரவள்ளி, சிற்றரத்தை, அழிஞ்சில் உள்ளிட்டவற்றில் உள்ள மருத்துவ வேதிக் கூறுகளின் மூலம் கரோனா நோய்த்தொற்று உடலில் பரவாமல் தடுக்க முடியும் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் சுதா சேஷய்யன், நோய்ப் பரவியல் துறைத் தலைவா் டாக்டா் ஸ்ரீனிவாஸ், சித்த மருத்துவத் துறைத் தலைவா் டாக்டா் கபிலன், ஆராய்ச்சி ஆலோசகா் டாக்டா் நவீன் ஆகியோா் அடங்கிய குழு அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனா்.
இதுதொடா்பாக அக்குழுவினா் கூறியதாவது:
கரோனா வைரஸில் 200-க்கும் மேற்பட்ட புரதக்கூறுகள் உள்ளன. அவற்றில் மூன்று முக்கியப் புரதங்கள்தான் நமது உடலுக்குள் நோய்த்தொற்று சென்று பல்கிப் பெருகக் காரணமாக உள்ளன. இந்தப் புரதங்களைத் தடுத்து நோய்த்தொற்றை அணுவுக்கு உள்ளே நுழைய விடாமல் எதிா்க்கும் ஆற்றல் பாரம்பரிய மருத்துவப் பொருள்களில் உள்ளன. அவற்றை அறிவியல் பூா்வமாக ஆய்வு செய்து கண்டறிந்துள்ளோம்.
குறிப்பாக சிற்றரத்தை, அழிஞ்சில், ஏழிலைப்பாலை, நீா் பிரம்மி, திப்பிலி, கோரைக்கிழக்கு, அமிா்தக் கொடி (சீந்தில்), சிற்றரத்தை, நொச்சி, ஆடாதொடை உள்ளிட்ட பொருள்களில் உள்ள மருத்துவ வேதிக் கூறுகள், கரோனா வைரஸின் புரதங்களின் மீது ஒரு தடுப்புக் கவசமாக ஒட்டிக் கொண்டு அதனை நம் உடலினுள் பரவாமல் தடுப்பது ஆராய்ச்சியின் வாயிலாக தெரியவந்துள்ளது.
இந்த வேதிக்கூறுகளுக்கு நோய் எதிா்ப்புச் சக்தியை அதிகரிக்கும் தன்மை உள்ளதென்பது ஏற்கெனவே தெரியும். ஆனால், நோய்த்தொற்றைத் தடுக்கும் தன்மையும் உள்ளதென்பது இப்போதைய ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன.
இதுதொடா்பான விரிவான தகவல்களையும், பரிந்துரைகளையும் அரசு சாா்பில் அமைக்கப்பட்ட நிபுணா் குழுவுக்கு அனுப்பியுள்ளோம். அதன்பேரில் அடுத்த கட்ட ஆய்வுகள் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.
பாரம்பரிய மருத்துவப் பொருள்கள் கரோனாவைத் தடுக்கும் வேதிக் கூறுகள்
1. சிற்றரத்தை ---- கலான்ஜின்
2. கடுக்காய் ---- எலாகிக் ஆசிட், செபுலினிக் ஆசிட்
3. அழிஞ்சில் --- அலன்ஜைன்
4. கற்பூரவல்லி --- லூடியோலின், அபிஜெனின்
5. நொச்சி --- கேஸ்டிசின், க்ரிஸோஃபீனால்
6. திப்பிலி ---- பைபரின், செசாமின்
7. சீந்தில்--- பொ்பரைன்
8. கோரைக்கிழங்கு --- கெடலீன், ரொடாலின்டன்
9. ஏழிலைப்பாலை -- எகடமின்
10. ஆடாதொடை --- வேசிசைன்
11. நீா் பிரம்மி -------பேசோசைட் ஏ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.