FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆதரவற்ற நிலையில் பட்டினியால் வாடும் பாட்டி

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் ஆதரவற்ற நிலையில் பசி, பட்டினியால் முதியவர்

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் ஆதரவற்ற நிலையில் பசி, பட்டினியால் முதியவர் ஒருவர் வாடிய நிலையில் வாழ்கிறார். சீனாவில் தொடங்கப்பட்ட கரோனா தொற்று, மனிதனை மட்டுமல்ல உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது.

நீர், நீலம், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் உள்ளிட்ட ஐம்பூதங்களை மட்டும் விட்டு விட்டு மற்ற அனைத்தையும் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது, ஒரு புறம் மனித உயிர்களைக் காப்பாற்ற மருத்துவர்கள் போராட்டம். ஒருபுறம் வெளியில் தேவையில்லாமல் சுற்றுபவர்களை அடக்குவதில் காவல் துறையினரின் போராட்டம். வீட்டிற்குள் தனித்திருங்கள், வெளியில் வராதீர்கள் என அரசின் போராட்டம். 

இப்படிப்பட்ட போராட்டங்கள் அனைத்தும் ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் ஏழ்மையில் வாழ்பவர்கள் பசியால், பட்டினி கிடந்து தவிப்பவர்களின் போராட்டம் பெரும் போராட்டமாக உள்ளது. அன்றாடம் கூலி வேலை செய்து, அன்றைக்குக் கிடைக்கும் வருமானத்தை வைத்து, அன்றைய தினத்தில் சாப்பிடுபவர்களின் நிலைமை சொல்ல முடியாத நிலைமையாக இருக்கிறது. அதுவும், வயதான நிலையில், ஆதரவற்றவர்களாக இருப்பவர்களின் நிலைமை ரொம்ப மோசமானதாக இருக்கின்றன.

Advertisement

Advertisement

இந்நிலையில், கூத்தாநல்லூர் அடுத்த கோரையாற்றுப் பாலம் அருகேயுள்ள காளியம்மன் கோயிலை ஒட்டினார் போல், சிறிய ஒட்டுக் குடிசையில் வசிக்கும் 70 வயது மூதாட்டியின் நிலைமை பார்ப்பவர்களுக்குக் கண்ணீரை வரவழைக்கும் அளவிற்கு உள்ளது. யாருமற்ற, ஆதரவற்ற 70 வயது மூதாட்டி அம்சவள்ளி. இவரது கணவர், மரம் ஏறியும், அலுமினியப் பாத்திரம் விற்றும் குடும்பத்தைக் கவனித்தவர்.உடல் நிலை சரியில்லாமல் இறந்து 5 ஆண்டுகள் ஆகிறது. 3 பெண் குழந்தைகள். மூவருக்கும் திருமணம் ஆகி வெளியூரில் உள்ளனர். அம்சவள்ளி மட்டும், இங்குள்ள ஒட்டுக் குடிசையில் உள்ளார். தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டையுடன், உதவி கிடைக்குமா என, 22 கிலோ மீட்டர் தூரம் மன்னார்குடிக்கு நடந்தே சென்று, பயன் இல்லாமல் திரும்பி வந்துள்ளார்.

இதுகுறித்து, மூதாட்டி அம்சவள்ளி கூறியது..

நான் மட்டும் இக்குடிசையில் என்னை எப்போது இறைவன் கூப்பிடுவான் என காத்துக் கொண்டு பட்டினியில் வாழ்கிறேன். காளியம்மன் கோயிலில் அர்ச்சனை தட்டு விற்றும், இட்லி, வடை சுட்டு அவைகளை விற்றும் என் உயிரை வைத்துள்ளேன்.

கரோனா தொற்று நோயால் ஊரடங்கு போடப்பட்டதால் கோயிலையும் பூட்டியாச்சு. இட்லிக் கடையையும் மூடியாச்சு.சாப்பாட்டுக்கே வழியில்லாமல், யாராவது கொடுத்தால் வாங்கி சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன். ஊரடங்கால், தமிழக அரசு கொடுத்த ஆயிரம் ரூபாயும் எனக்குக் கொடுக்கவில்லை. அங்காடிப் பொருட்களும் தர மறுத்து விட்டனர். 

எனது கணவர் பெயரில் உள்ள ரேஷன் கார்டு இருந்தும், ஸ்மார்ட்  கார்டு இல்லை என, நிவாரணப் பணமும், ரேஷன் பொருட்களும் தர மறுத்து விட்டனர். ஆனால், முதியோர் உதவித் தொகை ஆயிரம் ரூபாய் சரியாக வங்கியில் ஏறி விடுகிறது. அதில்,இந்த ஒட்டுக் குடிசைக்கு மாதம் ரூ.300 கொடுத்து விடுகிறேன்.

தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு, ஏதாவது நிவாரணம் கிடைக்கும் என, மன்னார்குடி .உப்புக்காரத் தெருவில் உள்ளவரைப் பார்க்க, கோரையாற்றிலிருந்து ம்ன்னார்குடிக்கு 22 கிலோ மீட்டர் நடந்து  சென்று வந்தேன். இரண்டு கால்களும் வீங்கி விட்டது. நல வாரியத்தில், உனக்கு 60 வயதாகி விட்டது, பணம் இல்லை எனச் சொல்லி அனுப்பி விட்டனர். யாருமற்ற அனாதையாக, சாப்பாட்டுக்கே வழியில்லாமல், பட்டினியால் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என அழுதபடியே தெரிவித்தார்.

பசி, பட்டினியால் வாடிக் கொண்டிருக்கும், வாழ்ந்து கொண்டிருக்கும், மூதாட்டியை, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு, அங்காடி அட்டையை, ஸ்மார்ட் கார்டாக மாற்றிக் கொடுத்து, மூதாட்டிக்கு ஆறுதல் கூறி, நிவாரணம் உள்ளிட்ட உதவிகள் செய்தால் இறைவனுக்குச் செய்த உதவியாக இருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments