கரோனா தொற்று பரவுதலை எதிர்த்தும் போராடும் தருணத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்சனிக் ஆல்பம் 30 என்ற ஹோமியோபதி மருந்தைப் பயன்படுத்த மத்திய, மாநில அரசுகள் பரிந்துரை செய்துள்ளன. இந்த மருந்தை அனைத்து அரசு மருத்துவமனைகளில் உள்ள ஹோமியோ மருந்தகங்களில் மக்களுக்கு வழங்க வேண்டும் என இந்திய ஹோமியோபதி மருத்துவக் குழு (ஐஹெச்எம்எல்) கேட்டுக் கொண்டுள்ளது.
திருச்சியில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி, மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு ஆகியோரைச் சந்தித்து, அரசின் ஆணைகள் மற்றும் பரிந்துரைக் கடிதங்களை இந்திய ஹோமியோபதி மருத்துவக் குழுவின் (ஐஹெச்எம்எல்) திருச்சி கிளை நிர்வாகிகள் திங்கள்கிழமை வழங்கி மருந்தை அறிமுகம் செய்து வைத்தனர். திருச்சி கிளையின் செயலர் மருத்துவர் எஸ். விஜய் ஆனந்த், தலைவர் மருத்துவர் டி. அனுராதா, ஆலோசகர் மருத்துவர் ஏ. பாலாஜி ஆகியோர், மாவட்ட மக்களுக்கு இந்த மருந்தைத் தாராளமாக கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இதுபற்றி மருத்துவர் எஸ். விஜய் ஆனந்த் கூறியது:
"உலகம் முழுவதும் கரோனா தொற்றால் லட்சக்கணக்கானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவும் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றின் அறிகுறிகளை வைத்துப் பார்த்த ஆயுஷ் மருத்துவத் துறையினர் ஆர்சனிக் ஆல்பம் 30 (arsenic album 30C) என்ற மருந்தை பரிந்துரை செய்துள்ளனர். உருளை மாத்திரைகளை நாளொன்றுக்கு வெறும் வயிற்றில் காலை மட்டும் 3 மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். 3 நாள்களுக்கு எடுத்துக் கொண்டாலே போதுமானது.
இதன் மூலம், சளி, இருமல், நுரையீரல் பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வு காணப்படும். கரோனா அறிகுறிகள் இத்தகைய பாதிப்பைக் கொண்டிருப்பதால் இந்த மருந்தானது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த மருந்தை எடுத்துக்கொள்வதன் மூலம் நோய்க் கிருமி மனித உடலுக்குள்ளே வரும்போது எதிர்கொள்வதற்கு எதிர்சக்தி கிடைக்கிறது. நோய்த் தடுப்பு மற்றும் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும். இந்த மருந்தை எடுத்துக்கொள்வதன் மூலம் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. மற்ற மருந்துகளைப் போன்று ஹோமியோபதி மருந்து ரத்தத்தில் கலப்பதில்லை. நரம்பு வழியாக செயல்பட கூடியது.
இந்த மருந்தை மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகமும் பரிந்துரை செய்துள்ளது. கேரளம், குஜராத், ஆந்திரம், மணிப்பூர், புது தில்லி உள்பட பல்வேறு மாநில அரசுகளும் பரிந்துரை செய்துள்ளன. தமிழக அரசும் அண்மையில் அறிவித்துள்ள ஆரோக்கியம் திட்டத்தில் இந்த மருந்தை இடம் பெறச் செய்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் உள்ள ஹோமியோ மருந்தகங்களில் ஆர்சனிக் ஆல்பம் 30 மருந்தை வழங்க வேண்டும்.
தனியார் மருத்துவமனைகள், தனியார் மருந்தகங்களிலும் இயன்றவரை இந்த மருந்த இலவசமாகவோ, குறைந்த விலைக்கோ வழங்க சங்கத்தின் சார்பில் ஐஹெச்எம்எல் உறுப்பினர்கள் அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்திலும் இதனை முழுமையாக நடைமுறைக்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்பைக் கோரியுள்ளோம்" என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.