வாழப்பாடி அருகே 3 பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: புதுமாப்பிள்ளை உள்பட இருவர் பலி
வாழப்பாடி அருகே மூன்று இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் புது மாப்பிள்ளை உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
வாழப்பாடி அருகே மூன்று இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் புது மாப்பிள்ளை உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து வாழப்பாடி காவல்துறை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் கன்னங்குறிச்சி மூக்கனேரி பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி இவரது மகன் அருன்பாலாஜி ( 29). புதிதாக வீடு கட்டி உள்ள இவருக்கு, திருமணம் செய்வதற்குப் பெண்பார்த்து நிச்சயம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், புதுவீடு குடிபுகும் கிருகப்பிரவேசத்திற்கு, தனது உறவினர்களை அழைப்பதற்காக, தனது இருசக்கர வாகனத்தில், அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவினரான சந்திரசேகரன் (49) என்பவரை தன்னோடு அழைத்துக்கொண்டு, சேலத்திலிருந்து ஆத்தூர் நோக்கி சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று சனிக்கிழமை காலை சென்று உள்ளார்.
வாழப்பாடி அருகே இருவழிப்பாதை முத்தம்பட்டி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலிருந்து சேலத்திலுள்ள உறவினர் வீட்டிற்குத் துக்கம் விசாரிக்க இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த நவீன்குமார்(25) என்பவர், அருன்பாலாஜி ஓட்டி வந்த வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி உள்ளார்.
இதனையடுத்து, அருண்குமாரை பின்தொடர்ந்து மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இவரது தந்தை செல்வமணிகண்டனும், திடீரென வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாததால், விபத்துக்குள்ளான இருசக்கர வாகனங்கள் மீது மோதி உள்ளார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சேலத்தைச் சேர்ந்த புதுமாப்பிள்ளை அருன்பாலாஜியும், சீர்காழியைச் சேர்ந்த செல்வமணிகண்டனும் தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில், நவீன்குமார், இவரோடு பைக்கில் உட்கார்ந்து கொண்டு வந்த இவரது மனைவி ஜோதி(20), இறந்துபோன செல்வ மணிகண்டனின் பைக்கில் உட்கார்ந்து வந்த அவரது மனைவி ரூமேந்திரா(50). ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த முத்தம்பட்டி பகுதி பொதுமக்களும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று, காயம்பட்டவர்களை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயமடைந்த 4 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வாழப்பாடி காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம் தலைமையிலான காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரு சக்கர வாகன பயணம் அதிகரிப்பு: பேருந்து, ரயில்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்கள் இயக்கப்படாததால், இந்த பொதுமுடக்கத் தருணத்தில், ஏராளமானோர் வெகு தூரத்திலிருந்து கூட இ-பாஸ் அனுமதி பெறாமல் இருசக்கர வாகனங்களில் செல்வது அதிகரித்துவிட்டது.
இந்த நிலையில், ஒரே நேரத்தில் மூன்று இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி, இருவர் உயிரிழந்த சம்பவம், வாழப்பாடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.