நீலகிரிக்கு தொடர்ந்து அதிகனமழை எச்சரிக்கை; கோவை, தேனியில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்துக்கு தொடர்ந்து அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை மற்றும் தேனியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்துக்கு தொடர்ந்து அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை மற்றும் தேனியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் அதிகனமழையும், கோவை, தேனி மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழையும் பெய்யும்.
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், வேலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
அடுத்த 48 மணி நேரத்துக்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழையும், தேனி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழையும், உள் தமிழகத்தில் இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவலாவில் 34 செ.மீ. மழையும், பந்தலூரில் 19 செ.மீ. மழையும், அவலாஞ்சியில் 11 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.