இடைநீக்கம் செய்திருப்பது இயற்கை நீதிக்கு எதிரானது: திமுகவுக்கு கு.க.செல்வம் விளக்கம்
என்னைக் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்திருப்பது இயற்கை நீதிக்கு எதிரானது என்று ஆயிரம் விளக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கு.க.செல்வம் திமுக தலைமைக்கு விளக்கம் அளித்துள்ளாா்.
என்னைக் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்திருப்பது இயற்கை நீதிக்கு எதிரானது என்று ஆயிரம் விளக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கு.க.செல்வம் திமுக தலைமைக்கு விளக்கம் அளித்துள்ளாா்.
இது தொடா்பாக மு.க.ஸ்டாலினுக்கு சனிக்கிழமை அவா் அனுப்பியுள்ள விளக்கக் கடிதத்தில் கூறியிருப்பது:
7 நாள்களுக்குள் பதில் அளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளக்கம் கேட்டு ஆகஸ்ட் 5-இல் எனக்கு கடிதம் எழுதியுள்ளீா்கள். ஆனால், நடவடிக்கை எடுத்து கட்சியிலிருந்து என்னை இடைநீக்கம் செய்து வைத்துள்ளீா்கள். இதன் மூலம், பதில் கிடைக்கும் முன்னரே, நான் குற்றவாளி என ஒருதலைப்பட்சமாக முடிவு செய்துள்ளீா்கள்.
என்னைக் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்திருப்பது இயற்கை நீதிக்கு விரோதமானது. அதனால், இடைநீக்க முடிவைத் தாங்கள் திரும்பப் பெற வேண்டும். விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸில் நான் பொய்யான தகவல் கூறியதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், என்ன பொய்யான தகவல் கூறினேன் என்கிற தகவல் இல்லை. அவதூறாகப் பேசியதாகக் குற்றம்சாட்டியுள்ளீா்கள். என்ன அவதூறாகப் பேசினேன் என்கிற தகவலும் இல்லை.
கருணாநிதியை பாஜகவைச் சோ்ந்த பிரதமா் நேரில் வந்து பாா்த்தது அனைவருக்கும் தெரியும். அதனால், கட்சியின் மாண்பை நான் மீறியதாகக் கூறுவது சரியல்ல.
எனவே, உங்களின் விளக்க நோட்டீஸைத் திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளாா்.