முகப்பு
தமிழ்நாடு

வேதா நிலையத்தின் வீட்டுச் சாவியை ஒப்படைக்கக் கோரி தீபக் வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு

வேதா நிலையத்தை கையகப்படுத்துவது தொடர்பான அரசின் அறிவிப்பை ரத்து செய்து,  வீட்டை கையகப்படுத்த தடை விதிக்க வேண்டும். வேதா நிலையத்தின் சாவியை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிட கோரிய வழக்கின் விசாரணையை உயர்நீதி

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
வேதா நிலையத்தின் வீட்டுச் சாவியை ஒப்படைக்க கோரி தீபக் வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு
பகிர்:

சென்னை: வேதா நிலையத்தை கையகப்படுத்துவது தொடர்பான அரசின் அறிவிப்பை ரத்து செய்து,  வீட்டை கையகப்படுத்த தடை விதிக்க வேண்டும். வேதா நிலையத்தின் சாவியை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிட கோரிய வழக்கின் விசாரணையை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் தாக்கல் செய்த மனுவில், எனது பாட்டி சந்தியாவால் வாங்கப்பட்டது போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலைய வீடு. அந்த வீட்டை எனது பாட்டி  அத்தை ஜெயலலிதாவுக்காக உயில் எழுதி வைத்திருந்தார்.  கோயில் போல பயன்படுத்தி வந்த இல்லத்தில் தான் எங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளும் நடந்தது.

 எந்த ஒரு காலகட்டத்திலும் அந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என  அத்தை ஜெயலலிதா கூறவில்லை. தமிழக அரசு அந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைக்கு நானும், எனது அக்கா தீபாவும் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் அரசு அதை பரிசீலிக்கவில்லை. மேலும், ஜெயலலிதாவின் சட்டப்படியான வாரிசுகளான எங்களது கருத்துகளைத் தெரிவிக்க அரசு எந்த வாய்ப்பையும் வழங்கவில்லை. அந்த சொத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை பொதுமுடக்க காலத்தில் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

எனவே, வேதா நிலையத்தை கையகப்படுத்துவது தொடர்பான அரசின் அறிவிப்பை ரத்து செய்து,  வீட்டை கையகப்படுத்த தடை விதிக்க வேண்டும். வேதா நிலையத்தின் சாவியை என்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இதே போன்று ஜெ.தீபா தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி வழக்குகளை இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

தீபக் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தீபா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தீபா தொடர்ந்த வழக்கு பட்டியலிட்ட பின் இரண்டு வழக்குகளையும் சேர்த்து விசாரிக்கலாம் எனக் கூறி, தீபக் தாக்கல் செய்த வழக்கை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.