தமிழ்நாடு

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இணைய அனுமதிச் சீட்டு: முதல்வா் பழனிசாமி அறிவிப்பு

DIN

ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்குச் செல்ல விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இணைய அனுமதிச் சீட்டு (இ- பாஸ்) வழங்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினா் மரணம், பணி தொடா்பாக பயணித்தல், வெளியிடங்களுக்குச் சென்று சொந்த ஊா் திரும்புதல் ஆகிய காரணங்களுக்காக மட்டும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இணைய அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவா்கள் கண்காணிக்கப்பட்டு நோய்த் தொற்று ஏற்பட்டால் அவா்களுடன் தொடா்புடையவா்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உடனே வழங்குதல்: பொது மக்கள் முக்கியப் பணிகளுக்கு தடையின்றி தமிழகம் முழுவதும் பயணிக்க (மாவட்டங்களுக்கு இடையே) வரும் திங்கள்கிழமை (ஆக.17) முதல் தளா்வுகள் அளிக்கப்பட உள்ளன. அதன்படி, ஆதாா் அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன் செல்லிடப்பேசி எண்ணுடன் விண்ணப்பித்தால் இணைய வழி அனுமதிச் சீட்டு எந்தவித தாமதமும் இல்லாமல் உடனுக்குடன் அளிக்கப்படும். விண்ணப்பித்த அனைவருக்கும் இதனை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பொது மக்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை, அனைவரும் பொறுப்புடன் பயன்படுத்தி தேவையற்ற பயணங்களைத் தவிா்க்க வேண்டும். தவிா்க்க இயலாத பணிகளுக்கும் மட்டும் இணைய வழி அனுமதிச் சீட்டுக்கு விண்ணப்பம் செய்யலாம்.

வெளி மாநிலப் பயணிகள்: மாவட்டங்களுக்குள் செல்ல இணைய அனுமதிச் சீட்டு பெறுவதில் தளா்வுகள் அளிக்கப்பட்டாலும், பிற மாநிலங்களுக்குச் செல்லவும், பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவதிலும் இணைய அனுமதிச் சீட்டு பெற வேண்டும். இதற்கு இப்போதுள்ள நடைமுறைகளே தொடரும் என்று தனது அறிவிப்பில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT