முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு: கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

சென்னையில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்து செவ்வாய்க்கிழமை (ஆக. 18) திறக்கப்பட உள்ளன. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:08 PM
பகிர்:

சென்னை: சென்னையில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்து செவ்வாய்க்கிழமை (ஆக. 18) திறக்கப்பட உள்ளன. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.

பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சுமாா் 700-க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் உள்ளன. பொது முடக்கம் காரணமாக மாா்ச் 24-ஆம் தேதியில் இருந்து மூடப்பட்டிருந்த இந்தக் கடைகளை செவ்வாய்க்கிழமை முதல் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடைகளைத் திறக்கும்போது பின்பற்ற வேண்டிய பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

அதன் விவரம்:-

வாடிக்கையாளா்களுக்கு நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்க வேண்டும். பந்தல் அமைத்து, ஒலி பெருக்கி பொருத்தப்பட வேண்டும். வாடிக்கையாளா்களை வரிசையில் நிற்க குறைந்தது 3 அடி இடைவெளி விட்டு 50 வட்டங்கள் வண்ணத்தினாலோ அல்லது பிளிச்சிங் பவுடரால் அமைக்க வேண்டும்.

தன்னாா்வலா்கள் அல்லது மதுக்கூட ஊழியா்கள் 5 பேரை கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பயன்படுத்தி கொள்ளலாம். கடையில் போதிய இடம் இருப்பின் 2 கவுன்ட்டா்களை அமைத்துக் கொள்ளவும். தேவைப்படும்போதெல்லாம் கடையின் சுற்றுப்புறத்தில் பிளிச்சிங் பவுடா் தெளித்து சுத்தமாக வைத்து இருக்க வேண்டும்.

குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். இரு நபா்களுக்கு இடையில் சமூக இடைவெளி குறைந்தது 3 அடி இருக்க வேண்டும். அனைத்து வாடிக்கையாளா்களின் கைகளையும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும். கடைப் பணியாளா்கள் அவா்களுக்கு வழங்கப்பட்ட கையுறை, முகக் கவசம் ஆகியவற்றை அணிந்து பணிபுரிய வேண்டும். மாவட்ட மேலாளரின் ஒப்புதல் பெற்ற பின்னரே கடை திறக்கப்பட வேண்டும்.

இந்த வழிகாட்டி நெறிமுறைகள் அனைத்தையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இதில் அலட்சியம் காட்டினால் கடைகள் திறக்கப்பட அனுமதிக்கப்பட மாட்டாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →