ஏரியில் மூழ்கவிருந்த 6 பேரை மீட்டவருக்கு ஜீவன் ரக்க்ஷாவிருது வழங்கிய முதல்வர்
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (24.8.2020) தலைமைச் செயலகத்தில், ஏரியில் மூழ்கி உயிருக்குப் போராடிய 6 நபர்களை மீட்டதற்காக, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர். ஸ்ரீதருக்கு
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (24.8.2020) தலைமைச் செயலகத்தில், ஏரியில் மூழ்கி உயிருக்குப் போராடிய 6 நபர்களை மீட்டதற்காக, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர். ஸ்ரீதருக்கு வீர, தீர செயலுக்கான 2019-ஆம் ஆண்டுக்கான “ஜீவன் ரக்க்ஷா” விருதிற்கான பதக்கம், சான்றிதழ் மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி கௌரவித்தார்.
அபாயகரமான விபத்துக்களில் சிக்கியவர்களின் உயிர் மற்றும் உடைமைகளைக் காக்க தைரியமாகவும், மன வலிமையுடனும் விபத்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு இந்திய அரசால் “ஜீவன் ரக்க்ஷா” என்ற விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பதக்கம், சான்றிதழ் மற்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையைக் கொண்டதாகும்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஒக்கநாடு மேலையூர் கிராமத்தில் உள்ள வெள்ளையன் ஏரியில் குளிக்கச் சென்ற மூன்று பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் ஏரியின் ஆழமான பகுதியில் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில், அவ்வழியாகச் சென்ற ஆர்.ஸ்ரீதர் நீரில் சிக்கியவர்களை ஒவ்வொருவராக ஏரியின் கரைக்கு இழுத்து சென்று ஆறு பேரையும் காப்பாற்றினார்.
3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகளின் உயிரை காக்க தனது உயிரைப் பணயம் வைத்து ஸ்ரீதர் அவர்களை காப்பாற்றியுள்ளார். இவ்வீர, தீர செயலுக்காக தமிழ்நாடு அரசு 2019-ஆம் ஆண்டுக்கான “ஜீவன் ரக்க்ஷா” விருதுக்கு இவரது பெயரை மத்திய அரசிற்கு பரிந்துரை செய்தது.
இப்பரிந்துரைக்கு இந்தியக் குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, தமிழக முதல்வர் இன்று ஸ்ரீதருக்கு 2019-ஆம் ஆண்டுக்கான “ஜீவன் ரக்க்ஷா” விருதிற்கான பதக்கம், சான்றிதழ் மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி கௌரவித்தார்.
இவர், 2019-ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின்போது, தமிழ்நாடு அரசின் வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.