பெற்றோர் பராமரிப்பு சட்டத்தை அமல்படுத்தக் கோரிய வழக்கு : உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
மூத்த குடிமக்கள், பெற்றோர் நலன் மற்றும் பராமரிப்பு சட்டத்தை அமல்படுத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: மூத்த குடிமக்கள், பெற்றோர் நலன் மற்றும் பராமரிப்பு சட்டத்தை அமல்படுத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசு, கடந்த 2007 ஆம் ஆண்டு கொண்டு வந்த பெற்றோர், மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டத்தை, அமல்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த 2009 ஆம் ஆண்டு விதிகளை வகுத்தது. ஆனால், இந்த சட்டத்தை அதிகாரிகள் அமல்படுத்துவது இல்லை. பிள்ளைகளால் பராமரிக்கப்படாத பெற்றோரிடம் இருந்து புகர்களைப் பெற மண்டல வருவாய் அதிகாரிக்கு இந்த சட்டத்தின் பிரிவுகள் அதிகாரம் வழங்கி உள்ளது. ஆனால், இந்த சட்டத்தை அமல்படுத்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே சட்டத்தை அமல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனு தொடர்பாக தமிழக சமூக நலத்துறை செயலாளர் மற்றும் ஆணையர் 3 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.