விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சுமார் 1,600 ஆண்டுகள் பழமையான குடவரைக் கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தக் கோயிலில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
சிவகாசி ஊராட்சி ஒன்றியம் கார்குறிச்சி ஊராட்சியைச் சேர்ந்த சொக்கலிங்கா புரத்தில் ஆறு நதிக்கரை பகுதியில் இந்த குடைவரைக் கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து சிவகாசி சார் ஆட்சியர் தினேஷ்குமார் வட்டாட்சியர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர், இதுகுறித்து தகவலறிந்த ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி சாந்தலிங்கம் வரலாற்றுப் பேராசிரியர் மகாலிங்கம் உள்ளிட்டோர் சொக்கலிங்காபுரம் வந்து அங்குள்ள குடவரைக் கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 40 நிமிடங்கள் அவர்கள் ஆய்வு செய்தனர்.
பின்னர் சாந்தலிங்கம் கூறியதாவது..
விருதுநகர் மாவட்டத்தில் செவல்பட்டி, மூவரை வென்றான், திருச்சி ஆகிய இடங்களில் இதுவரை குடைவரைக்கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது இயற்கையான பாறைகளை குடைந்து கோயில் அமைப்பதாகும். கிபி ஏழாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டு பல்லவ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் என்பது குடைவரைக் கோயில்கள் உருவாக்கப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்தது.
சிவகாசி அருகே சொக்கலிங்கா புரத்தில் உள்ள இந்த குடைவரைக் கோயில் சுமார் 1,600 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டிருக்கலாம். திருச்செந்தூரில் உள்ள வள்ளி குகை பஞ்சலிங்கம் பெருமாள் கோயில் புகை மணல் கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கோயில் முற்றிலும் சுண்ணாம்புக் கற்களால் ஆற்றங்கரையில் உருவாக்கப்பட்டுள்ளது வியப்பானது ஆகும்.
இந்த கோயிலில் இரண்டு பிரகாரங்கள் இருப்பது அபூர்வமான ஒன்றாகும். இக்கோயிலில் தொல்லியல் துறை பார்வைக்கு இதுவரை படாதது ஆச்சரியம்தான் மிகவும் அரிதான கட்டுமானம். இதில் உள்ள சுரங்கப்பாதை கருவறையைச் சுற்றி வருவதாக உள்ளது. மிகவும் அரிதானதாகும் இதுபோன்ற வடிவமைப்பு மதுரை கூடல்நகர் பெருமாள் கோயிலில் உள்ளது.
இந்தக் கோயிலில் சிலைகள் எதுவும் இல்லை, கல்வெட்டுக்கள் எதுவும் இல்லை எனினும் இந்த கோவில் சுமார் 1,700 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. அதாவது கிபி எட்டாம் நூற்றாண்டில் பொற்கால மன்னர் கால பாண்டிய மன்னர் காலத்தில் இக்கோயில் உருவாக்கப்பட்டிருக்கலாம். இக்கோயிலில் ஆய்வறிக்கையைத் தமிழக அரசின் தொல்லியல் துறைக்கு அனுப்பி வைத்துள்ளேன். அந்தத் துணை இயக்குனர் உதவியோடு கோயில் பராமரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னமாக இதனை மாற்றுவதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்வேன் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.