புது தில்லி: ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீது திங்கள்கிழமை விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது. இது தொடர்பாக தமிழக அரசு உள்ளிட்ட எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து நிகழ்ந்த போலீஸ் துப்பாக்கிசூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்குப் பின், சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாகக் கூறி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.
தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இது தொடர்பான மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 18-ம் தேதி தீர்ப்பு அளித்தது.
அதில், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நச்சுத்தன்மை கொண்ட ஆர்செனிக் அமிலம் அதிக அளவில் வெளியேற்றப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ரசாயனக் கழிவுகளை ஆலை நிர்வாகம் முறையாக அப்புறப்படுத்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையின் முந்தைய நடவடிக்கைகளின் அடிப்படையில் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு எடுத்த நடவடிக்கை நியாயமானதுதான் என தெரிவித்து, வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. தவிர, ஹரி ராகவன், எஸ்.ராஜு உள்ளிட்ட சிலரும் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன்பு மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வேதாந்தா நிறுவனத்தின் சட்டப் பிரிவு பொது மேலாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், "வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் உரிய வகையில் பரிசீலிக்காமல் தீர்ப்பு அளித்துள்ளது. இதனால், அந்த தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும். சுற்றுச்சூழல் விதிகளை ஆலை நிர்வாகம் உரிய வகையில் பின்பற்றியுள்ளது. ஆலைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தவர்கள் பலரும் அரசியல்வாதிகளாகவும், அரசியல் அமைப்புகள் அல்லது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் தொடர்புடையவர்களாகவும் உள்ளனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரோஹிண்டன் ஃபாலி நாரிமன், நவீன் சின்ஹா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை காணொலி வழியில் நடைபெற்றது.
தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் சி.எஸ். வைத்தியநாதன், கே.வி. விஸ்வநாதன், வழக்குரைஞர் யோகேஷ் கண்ணா, இதர எதிர்மனுதாரர்களான ஹரி ராகவன், எஸ்.ராஜு ஆகியோர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் கோலின் கான்சால்வேஸ், வழக்குரைஞர் டி.எஸ்.சபரீஷ் உள்ளிட்டோர் ஆஜராகினர்.
மனுதாரர் வேதாந்தா நிறுவனம் சார்பில் மூத்த வழக்குரைஞர் சி.ஏ. சுந்தரம், ஷியாம் திவான் ஆஜராகி, "ஸ்டெர்லைட் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும். ஆலை இரு ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளதால் பராமரிப்புப் பணியை மேற்கொள்ள முடியவில்லை. இதனால், பராமரிப்புப் பணியை மேற்கொள்ளும் வகையில் இடைக்கால உத்தரவாவது பிறப்பிக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டனர்.
இதை நீதிபதிகள் ஏற்க மறுத்து பிறப்பித்த உத்தரவு: "இந்த மேல்முறையீட்டு மனு அனுமதிக்கப்படுகிறது. இந்த மனு தொடர்பாக எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. எதிர் மனுதாரர்கள் நோட்டீஸூக்கு நான்கு வாரங்களுக்குள் பதில் தாக்க செய்ய வேண்டும். அதன்பிறகு, அந்த பதிலுக்கு மறுப்பு ஏதும் இருந்தால் அதை இரு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதன்பிறகு மனு விசாரணைக்கு பட்டியலிடப்பட வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.