முகப்பு
சனிப்பெயர்ச்சி பலன்கள்

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2026: துலாம்

துலா ராசிக்காரர்களுக்கான சனிப்பெயர்ச்சி பலன்களை விரிவாக தெரிந்துகொள்வோம்.

துலா ராசி
பகிர்:
Updated On : 5 மார்ச், 2026 at 3:01 PM

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2026 ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)

கிரகநிலை 

Advertisement

இதுவரை உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி ரண ருண ரோக ஸ்தானத்திற்கு செல்கிறார்.

மூன்றாம் பார்வையால் அஷ்டம ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் அயன சயன போக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் தைரிய வீரிய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

பலன்

துலாம் ராசி அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சியால் கடந்த காலத்தில் கிடைத்திராத சுகமான அனுபவங்கள் கிரக அனுகூலத்தால் உங்கள் வாழ்வில் நிகழும். உங்கள் வெற்றி ஒவ்வொன்றுக்கும் உங்கள் நற்செயல்கள் உறுதுணையாக இருக்கும். புகழ்ச்சிக்கு மயங்காது எதார்த்த நிலையை உணர்ந்து வாழ வேண்டும்.வீடு, மனை, வாகன, தாயின் உடல்நலம் ஆகியவற்றில் அனுகூலமான நற்பலன்கள் நடந்து உங்கள் மனதை மகிழ்வு பெறச் செய்யும். 

குடும்பத்தில் குடும்ப உறவினர், மற்றும் வெளி விவகாரங்கள் தொடர்பான விவாதங்கள் கணவன், மனைவி பேச்சுகளில் தலை தூக்கும். வெளிவிவகாரப் பேச்சுகளை தவிர்த்து குடும்ப ஒற்றுமையை பாதுகாக்கவும். ஆயுள், ஆரோக்கிய பலம் உண்டாகும். அவ்வப்போது படபடப்பு தன்மை ஏற்பட்டு பின்னர் விலகும். விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் அமைதி நிலவும்.

உத்தியோகஸ்தர்கள்

மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். புத்திசாலித்தனமாகவே காயை நகர்த்துவீர்கள். வேலைப்பளு காரணமாக உடல் சோர்வு ஏற்படலாம். நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். உங்களைப் புகழ்ந்து பேசுபவரை நம்ப வேண்டாம். புத்திசாலித்தனமாக அவரிடம் இருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.

தொழிலதிபர்கள்

தொழில் சார்ந்த வகையில் உள்ள சிரமங்களை தவிர்க்க, புதிய யுக்திகளை செயல்படுத்தி பலமான வெற்றிகளை பெறுவீர்கள். வெளியூர் பயணங்களில் அனுகூலமான அனுபவங்களும், வெற்றியும் உண்டாகும்.  தொழிலாளர்களை நன்மதிப்புடன் நடத்துங்கள். உங்களுக்கு உண்மையாக உழைப்பவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள்.

பெண்கள்

குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு பொருளாதார ரீதியிலும் உடல் ஆரோக்கியத்திலும் வளமான நன்னிலைகள் உண்டாகும். ஆபரணச் சேர்க்கை எதிர்பார்ப்புகள் மங்கலமாய் நிறைவேறும். சேமிப்பு பெருகும். இதை உங்களின் குழந்தையின் பேரில் சேர்த்தால் எதிர்காலத்தில் நிம்மதியாக வாழ வழிபிறக்கும்.

கலைஞர்கள்

பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருந்தவர்கள், சிறுசிறு துன்பங்களுக்கு ஆட்பட்டவர்கள் கூட இப்பொழுது சிரமங்கள் இல்லாத வாழ்க்கையை பெறமுடியும். புதிய வாய்ப்புகளை சரியான ஆட்களிடமிருந்து சரியான தருணத்தில் கிடைக்கப் பெற்று முன்னேறப் போகிறீர்கள். எதிர்காலத்தைப் பற்றிய கவலை அகலும்.

அரசியல்வாதிகள்

கடந்த கால தவற்றை எண்ணாமல் புதிய முயற்சிக்கு வித்திடுவீர்கள். மன உலைச்சலால்  ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படலாம். மனதை தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள். முன்னோர்கள் வழிபாட்டை முறைப்படி ஒழுங்குபடுத்தினால் உங்களை துரத்திக் கொண்டிருந்த தொல்லைகள் அகலும். தியானம் செய்து மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்.

மாணவர்கள்

தங்கள் படிப்பில் அதி தீவிரமாக லட்சிய மனப் பான்மையுடன் படித்து புதிய சாதனை நிகழ்த்துவார்கள். நண்பர்க்ள் உதவினாலும் படிப்பு சிறப்பு பெறும். தந்தை, மகன் இடையே நல்ல நட்புறவு இருக்கும் வகையில் நடந்து நற்பெயர் பெறுவீர்கள். வாகன, பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் கவனத்தைச் சிதறவிடாமல் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.

சித்திரை 3, 4 பாதங்கள்

இந்த சனிப் பெயர்ச்சியால் செயல் திறமை அதிகரிக்கும்.போட்டிகளில் பங்கு பெற ஆர்வம் உண்டாகும்.  மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். ஆனால் மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும்.

சுவாதி

இந்த சனிப் பெயர்ச்சியால் மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும். எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும்.

விசாகம் 1, 2, 3 பாதங்கள்

இந்த சனிப் பெயர்ச்சியால் ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும்.  குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள்  உங்களை அனுசரித்து செல்வார்கள்.  கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். பிள்ளைகள்  துணையால் மருத்துவ செலவு ஏற்படலாம்.

பரிகாரம்

வெள்ளிக்கிழமைகளில் சப்தகன்னியரை அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். செல்வம்  சேரும். செல்வாக்கு உயரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.