ஆபத்து ஏற்படுத்தும் மின் வயர்கள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
தேனி மாவட்டம் கம்பம் சுருளி அருவிக்கு செல்லும் வழியில் ஆபத்தை விளைவிக்கும் மின்சார வயர்களை அகற்றி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் சுருளி அருவிக்கு செல்லும் வழியில் ஆபத்தை விளைவிக்கும் மின்சார வயர்களை அகற்றி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து சுருளி அருவி செல்லும் சாலையில் இரு புறங்களிலும் புளியமரங்கள் உள்ளன. இந்த புளியமரங்களுக்கிடையே மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு மும்முனை மின்சார கம்பிகள் மரங்களுக்கு நடுவே செல்கின்றன.
இந்த மின் கம்பிகள் மூலம் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புகள், கடைகள் மற்றும் செங்கல் காளவாசலுக்கு மின் விநியோகம் செய்யப்படுகின்றது.
இந்நிலையில், மின்வாரியத்துறையினர் முறையான பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால் மின் கம்பிகள் தாழ்வாகவும், மரக்கிளைகளில் உரசியும் காணப்படுகின்றன.
மேலும் தாழ்வாக உள்ள இந்த மின் கம்பிகளை புளியமரத்தில் இழுத்து கட்டியுள்ளனர்.
இதனால் காற்று அடிக்கும் போது மரக்கிளைகள் அசையும்போது மரத்தில் கட்டியுள்ள மின்வயர்கள் ஒன்றோடு ஒன்று உரசி அவ்வப்போது தீப்பொறி ஏற்படுகின்றன.
இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர்.
இந்நிலையில், தற்போது காற்றுடன் மழை பெய்து வருவதால் மரங்கள் ஈரப்பதத்துடன் காணப்படுகின்றன.
காற்று அடிக்கும் போது மின் கம்பிகள் மரத்தில் உரசி மின்சாரம் பாய்கின்றன. இதனால் மழைபெய்யும்போது மழைக்காக மரத்திற்கு அடியில் ஒதுங்கும் வாகன ஓட்டிகள் மரத்தை தொட்டபோது ஷாக் அடிப்பதாக கூறுகின்றனர்.
எனவே விபத்து ஏற்படுவதற்கு முன்பு மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.