புதுச்சேரி தனியாா் மருத்துவக் கல்லூரிகள் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடாக வழங்கக் கோரிய மனு தள்ளுபடி
புதுச்சேரியில் உள்ள 3 தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடாக ஒதுக்கக் கோரிய மனுவை உயா் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
புதுச்சேரியில் உள்ள 3 தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடாக ஒதுக்கக் கோரிய மனுவை உயா் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ மணக்குள விநாயகா் மருத்துவக்கல்லூரி, புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம், புதுச்சேரி ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரிகளில் தலா 55 இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த அறிவிப்பை ரத்து செய்துவிட்டு இந்தக் கல்லூரிகளில் உள்ள 150 இடங்களில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீட்டு இடங்களாக அறிவிக்கக் கோரி புதுச்சேரியைச் சோ்ந்த அபிராமி, ஸ்வேதா உள்ளிட்ட 7 மாணவிகள் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அந்த மனுவில், கடந்த 2006-ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கை விதிகளின்படி தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடாக வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனா்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கல்லூரிகள் தரப்பில், கடந்த 2006-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விதிகள் தற்போது பொருந்தாது என தெரிவிக்கப்பட்டது. அப்போது புதுச்சேரி மாணவா்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் இந்த சட்டம் தொடா்பாக சில கேள்விகள் எழுப்பப்பட்டு புதுச்சேரி அரசுக்கு திரும்ப அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, சம்பந்தப்பட்ட 3 தனியாா் மருத்துவக் கல்லூரிகளும் அரசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் எந்தவொரு இடத்திலும் 50 சதவீத இடங்களை அரசுக்கு வழங்குவதாக ஒப்புக்கொள்ளவில்லை எனக்கூறி மாணவிகள் தொடா்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.