முகப்பு
தமிழ்நாடு

ஆலங்குளம் அருகே கொலை செய்யப்பட்டவர் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் வழங்கக் கோரி சாலை மறியல்

ஆலங்குளம் அருகே கொலை செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் வழங்கக் கோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On : 16 டிசம்பர், 2020 at 12:30 PM
ஆலங்குளம் அருகே கொலை செய்யப்பட்டவர் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டுள்ள உறவினர்கள்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:38 PM

ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே கொலை செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் வழங்கக் கோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆலங்குளம் அருகேயுள்ள ரெட்டியார்பட்டி கீழத் தெருவைச் சேர்ந்தவர் பால் மாணிக்கம் மகன் இசக்கித்துரை(37). ஆட்டோ ஓட்டுனர். அதே பகுதியைச் சேர்ந்த சிவசூரியன் மகன் சண்முகராஜ்(37) என்பவர் இசக்கிதுரை ஆட்டோவை ரெட்டியார்பட்டி -  ஊத்துமலை சாலையில் உள்ள ஒரு பகுதிக்கு வாடகைக்கு வரவழைத்தாராம். அங்கு வந்த அவரை சண்முகராஜ் அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த இசக்கித்துரை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 

விசாரணையில் சில தினங்களுக்கு முன்பு இசக்கிதுரை இரவு நேரத்தில் ஆட்டோவில் செல்லும் போது அதிக அளவில் ஒளி தரக்கூடிய எல்.இ.டி விளக்கு பொருத்தி சென்றாராம். அப்போது, எதிரே சண்முகராஜ் இருசக்கர வாகனத்தில் வந்த போது அவர் முகத்தில் அதிக அளவில் ஒளி பட்டதால் அவர் நிலை குலைந்தாராம். இதில் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. 

Advertisement

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இசக்கிதுரையை சண்முகராஜ் கொலை செய்துள்ளதாக காவலர்களின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து வழக்குப் பதிந்த ஊத்துமலை காவலர்கள் சண்முகராஜை கைது செய்தனர். இசக்கிதுரை சடலத்தை சங்கரன்கோவில் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இசக்கிதுரைக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில், இசக்கிதுரையை அரிவாளால் வெட்டிக் கெலை செய்த குற்றவாளிகளை வன்கொடுமை சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்யவேண்டும். அவரது குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவரது உறவினர்கள் ரெட்டியார்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலை மறியல் செய்து வருகின்றனர்.  

ஆலங்குளம் டி.எஸ்.பி. பொன்னிவளவன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மாவட்ட வருவாய் அலுவலர் அல்லது ஆட்சியர் வந்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கண்டால் மட்டுமே போராட்டம் விலக்கிக் கொள்ளப்படும் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் ரெட்டியார்பட்டியில் பலத்த காவலர்கள் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.