முகப்பு
தமிழ்நாடு

சேலத்தில் அகர்வால் சிறப்பு கண் மருத்துவமனையை முதல்வர் திறந்து வைத்தார்

ஐந்து நாள் பயணமாக சேலம் சென்றிருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, இன்று தனியார் கண் மருத்துவமனையை திறந்து வைத்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
சேலம் ஐந்து சாலை பகுதியில் அகர்வால் கண் மருத்துவமனையை புதன்கிழமை தொடங்கி வைக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
பகிர்:

சேலம் வந்திருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, இன்று அகர்வால் சிறப்பு கண் சிகிச்சை  மருத்துவமனையை திறந்து வைத்தார்.

சேலம், கரூர், அரியலூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 4 நாள் சுற்றுப்பயணமாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் புதன்கிழமை காலை சேலத்திற்கு வருகை தந்தார். 

தொடர்ந்து சேலம் 5 சாலை சந்திப்பு பகுதியில் அகர்வால் சிறப்பு கண் சிகிச்சை  மருத்துவமனையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாநகரில், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் புதிய கிளையை திறந்து வைத்து ஆற்றிய உரையில், உடல் உறுப்புகளில் அறிவின் திறவுகோலாக இருப்பது கண்கள். குறிப்பு அறிவதிலும், குறிப்பு அறிவுறுத்துவதிலும் கண் பெரும் பங்கு வகிக்கிறது. அதனால் தான், 
“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு”
அதாவது எண்ணும் எழுத்தும் மக்களுக்கு கண் ஆகும் என்றார் தெய்வப் புலவர்.

சிற்பக்கலையில், சிலை வடிக்கும்போது, அனைத்துவித வேலைப்பாடுகளும் முடிந்தபின், இறுதியாக நடக்கும் கண்திறக்கும் நிகழ்வு முக்கிய இடத்தைப் பெறுகிறது. ஏன்? சிலையின் உயிரோட்டத்திற்கு கண் தான் ஆதாரம். இத்தகைய சிறப்புமிக்க உறுப்பாகிய கண்ணைப் பாதுகாக்கின்ற பணியை, அகர்வால் மருத்துவமனை, 60 ஆண்டுகளுக்கும் மேலாக நல்லமுறையில் நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வோடு மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது.

கண்ணுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களைக் கண்டறிந்து, அதற்குத் தீர்வு காண, பல்வேறு நவீன யுக்திகளைக் கையாண்டு, எளிமையான முறையில், குறைவான நேரத்தில் தரமான சிகிச்சை அளிக்கும் பொருட்டு, 95-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை 13 நாடுகளில் நிறுவி, லட்சக்கணக்கான நோயாளிகளை குணப்படுத்தி வருகின்ற அகர்வால் மருத்துவமனை, தங்கள் மருத்துவமனை என்று அறிவதில் நான் பெருமை கொள்கிறேன்.

சமூக பொறுப்புணர்வுடன் இலவச கண்சிகிச்சை முகாம்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தி, குறிப்பாக கிராமப்புறப் பகுதிகளிலும் நடத்தி, ஏழை, எளிய மக்களுக்கு உயரிய சிசிச்சையளிக்கும் உங்கள் நிறுவனத்தின் சமுதாயப் பணியை பாராட்டுகிறேன்.

இறைவன் எப்படி தன்னை நாடி வரும் மக்களிடம், எந்தவிதமான வித்தியாசமும் காட்டாமல் அவர்களின் குறையைத் தீர்க்கின்றானோ, அதுபோல் மருத்துவமனைகளும், தம்மை நாடி வரும் நோயாளிகளிடம் எந்தவிதமான வித்தியாசமும் பாராமல் அவர்களுக்குத் தரமான மருத்துவ சேவையை வழங்க வேண்டுமென்று அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொண்டு, சேலம் மாவட்ட மக்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய அகர்வால் கண் மருத்துவமனையை இந்த நிறுவனம் அளித்திருக்கிறது. அதற்கு மாவட்ட மக்களின் சார்பாகவும், எனது சார்பாகவும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து, இந்த இனிய நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வதற்கு நல்ல வாய்ப்பினை நல்கிய இந்நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்து விடை பெறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன், எம்எல்ஏ-க்கள் உறுப்பினர்கள் ஜி. வெங்கடாஜலம், செ.செம்மலை மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை  தலைவர் மருத்துவர் அமர் அகர்வால், தலைமைச் செயல் அதிகாரி மருத்துவர் ஆதில் அகர்வால், தமிழ்நாடு பிராந்திய மருத்துவ இயக்குநர் மருத்துவர் கலாதேவி, சேலம் கண் மருத்துவமனை பிரிவின் தலைவர் மருத்துவர் கற்பகவல்லி ஆகியோர் பங்கேற்றனர்.  

தொடர்ந்து   வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்தும்,  கரோனா நோய் தடுப்புப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்வதற்காக கரூர் புறப்பட்டு சென்றார். 
 மாலையில் சேலம் திரும்பும் முதல்வர், மணியனூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மினி கிளினிக்கை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →