விவசாயிகளின் பிரச்னையில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்: வெங்கைய நாயுடு
விவசாயிகளின் பிரச்னைகளில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு கூறியுள்ளார்.
கோவை: விவசாயிகளின் பிரச்னைகளில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு கூறியுள்ளார்.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் 41-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது, இந்தியாவில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு 59 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு வேளாண் பரப்பளவு அதிகரித்துள்ளது
கரோனா நெருக்கடி காலத்திலும் உணவு தானிய உற்பத்தி அதிகரித்துள்ளது. கடினமான காலத்திலும் அர்ப்பணிப்பைக் காட்டிய விவசாயிகளுக்கு நன்றி. இந்தியாவில் நீர்ப்பாசன ஆதாரங்கள் மாசுபடுவதும் கவலைக்குரியது. குறிப்பாக தமிழகம் போன்ற நீர் பற்றாக்குறை உள்ள மாநிலத்தில், வறட்சியைத் தாங்கும் மரபணு பயிர் வகைகளையும் நீர் சேமிப்பு தொழில்நுட்பங்களையும் உருவாக்க வேண்டும்.
விவசாயத்தில் உற்பத்தியை அதிகரித்து, செலவினை குறைக்க வேண்டும். இது சாத்தியமான ஒன்று. அதற்கு தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். இதற்கு வேளாண்மை பல்கலைக்கழகங்கள் உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன்.
மத்திய அரசு விவசாயிகளுக்கு பிரதமர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளன. அதன் வாயிலாக 72 % விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். விவசாயிகள் தங்களுக்காக மட்டுமின்றி நாட்டில் உள்ள அனைவருக்காகவும் பயிரிடுபவர்கள். எனவே விவசாயிகளின் பிரச்னையில் நாட்டில் உள்ள அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், வேளாண்துறை அமைச்சர் அன்பழகன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பட்டமளிப்பு நிகழ்வில் மொத்தம் 1,385 மாணவர்கள் நேரடியாக பட்டங்கள் பெற்றனர். 57 மாணவர்கள் பதக்கங்கள் பெற்றனர்.