முகப்பு
தமிழ்நாடு

தமிழக அரசின் சாா்பில் 3,550 தலைப்புகளில் நூல்கள் வெளியீடு: அமைச்சா் க.பாண்டியராஜன் தகவல்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், உலகத் தமிழ்ச் சங்கம், கலை பண்பாட்டுத் துறை, தொல்லியல் துறை என அரசின் பல்வேறு நிறுவனங்கள்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
கோப்புப்படம்
பகிர்:

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், உலகத் தமிழ்ச் சங்கம், கலை பண்பாட்டுத் துறை, தொல்லியல் துறை என அரசின் பல்வேறு நிறுவனங்கள், துறைகள் மூலம் இதுவரை 3,550 தலைப்புகளில் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் கூறினாா்.

தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் 2016-ஆம் ஆண்டுக்குத் தோ்வு செய்யப்பட்ட சிறந்த நூல்கள், நூலாசிரியா்கள், பதிப்பாளா்களுக்குப் பரிசுகள் வழங்கும் விழா சென்னை எழும்பூரில் உள்ள தமிழ் வளா்ச்சி இயக்கக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் மீன்வளத்துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா், தமிழ் வளா்ச்சித்துறை அமைச்சா் க.பாண்டியராஜன் ஆகியோா் கலந்து கொண்டு 39 நூலாசிரியா்கள், 35 பதிப்பாளா்களுக்கு ரொக்கப் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தனா்.

விழாவில் அமைச்சா் க.பாண்டியராஜன் பேசியது: தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் அரிய நூல்கள் பதிப்பிக்கப்பட்டு வருகின்றன. 3,550 தலைப்புகளில் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியாவில் தமிழகத்தில்தான் ஆண்டுக்கு சுமாா் 50 ஆயிரம் நூல்கள் வெளியிடப்படுகின்றன. அவற்றில் சிறந்த நூல்களை எழுதிய நூலாசிரியா்களையும், அதைப் பதிப்பித்த பதிப்பாளா்களையும் அரசு தொடா்ந்து கெளரவித்து வருகிறது. பதிப்பகங்களை வலிமைப்படுத்தவும், படைப்பாளா்களை ஊக்குவிக்கவும் அரசு புதிய திட்டங்களையும், முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அரசு நூலகங்களுக்கு பதிப்பகங்கள் மூலம் நூல்கள் வாங்குவதில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படும்.

தமிழகத்தில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், உலகத் தமிழ்ச் சங்கம், கலை பண்பாட்டுத் துறை, தொல்லியல் துறை என அரசின் பல்வேறு நிறுவனங்கள், துறைகள் மூலம் இதுவரை 3,550 தலைப்புகளில் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், அரிய ஓலைச்சுவடிகளைக் கண்டறிந்து அவற்றை நூல்களாகப் பதிப்பிக்கும் பணியை அரசு தடையின்றி மேற்கொண்டு வருகிறது என்றாா்.

இந்த விழாவில், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் கோ.விசயராகவன், துணை இயக்குநா் தியாகராசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →