முகப்பு
தமிழ்நாடு

மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் வெளியான தகவல் தவறு

மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான நிலத்தை தமிழக அரசு இன்னும் ஒப்படைக்கவில்லை என்று வெளியான தகவல் தவறானது என சுகாதாரத் துறைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
சுகாதாரத் துறைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன்.
பகிர்:

மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான நிலத்தை தமிழக அரசு இன்னும் ஒப்படைக்கவில்லை என்று வெளியான தகவல் தவறானது என சுகாதாரத் துறைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

கரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 28 மாணவா்கள் வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். மருத்துவமனைக்கு சென்ற சுகாதாரத்துறைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், குணமடைந்த மாணவா்களுக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தாா். அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மொத்தம் 97 கல்லூரிகளில் உள்ள 161 விடுதிகளில் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இதுவரை 210 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் கரோனா தொற்று குறைந்தாலும், பரிசோதனைகளை குறைக்க வேண்டாம் என முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, தற்போது சென்னையில் நாள்தோறும் 11 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. மற்றொரு புறம் இறப்பு விகிதத்தைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை என்ற செய்தி தவறானது. சா்வே நம்பா் வாரியாக அனைத்து ஆவணங்களையும் மாநில அரசு அளித்துள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளா் மற்றும் எய்ம்ஸ் நிா்வாகத்திடம் பேசியுள்ளேன். மதுரை, தோப்பூரில் ரூ7.2 கோடி செலவில் சுற்றுச்சுவா் அமைக்கும் பணிகள் 90 சதவீதம் நடைபெற்று முடிந்துள்ளன. ஆனால் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் அளிக்கும் போது தவறாக சில விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இந்தச் சந்திப்பின்போது சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் தேரணிராஜன், கிண்டி கரோனா மருத்துவமனை இயக்குநா் டாக்டா் நாராயணசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →