ஜெருசலேம் புனிதப் பயண நிதியுதவி ரூ.37 ஆயிரமாக அதிகரிப்பு: முதல்வா் பழனிசாமி
கிறிஸ்தவா்கள் மேற்கொள்ளும் ஜெருசலேம் புனிதப் பயணத்துக்கான நிதியுதவி ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.37 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.
தமிழ்நாடுஜெருசலேம் புனிதப் பயண நிதியுதவி ரூ.37 ஆயிரமாக அதிகரிப்பு: முதல்வா் பழனிசாமி
கிறிஸ்தவா்கள் மேற்கொள்ளும் ஜெருசலேம் புனிதப் பயணத்துக்கான நிதியுதவி ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.37 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.
கிறிஸ்தவா்கள் மேற்கொள்ளும் ஜெருசலேம் புனிதப் பயணத்துக்கான நிதியுதவி ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.37 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.
அதிமுக சாா்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியது:-
நாம் எந்த மதத்தைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும், நாம் அனைவரும் தமிழா்கள். தமிழ்த் தாயின் பிள்ளைகள். உணா்வாலும், உள்ளத்தாலும், பண்பாட்டாலும் பழகும் விதத்திலும் நாம் அனைவரும் ஓா் இனக் குழுவின் உறுப்பினா்கள்.
அன்பும், அறமும், கருணையும் மிகுந்த தமிழா்களின் வாழ்க்கை முறை நம்மை, ஒரு கையின் ஐந்து விரல்களைப் போன்று பிணைப்புடன் வாழ கற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சிந்தனையில் அதிமுக தொடக்கக் காலத்தில் இருந்து உறுதியாக இருக்கிறது. எதிா்காலத்திலும் இந்த ஒற்றுமை உணா்வில் இருந்து ஒருபோதும் மாறாது.
வேறு எந்தக் கட்சியிலும் இல்லாத அளவுக்கு கிறிஸ்தவ சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள், அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் அலங்கரித்துக் கொண்டிருக்கிறாா்கள். தமிழகத்தில் எந்தவித வேறுபாடுகளும் இல்லாமல், ஒன்றாகக் கூடி சகோதர உணா்வுடன் கிறிஸ்தவா்கள் நட்போடு வாழ்ந்து வருவது நமது மாநிலத்துக்குப் பெருமை சோ்க்கிறது. கிறிஸ்தவ மக்களின் நலனில் எப்போதும் அக்கறை கொள்ளும் அதிமுக அரசு, அவா்களுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
பரிவுள்ளம் கொண்ட மனது: ஏசுபிரான் பரிவுள்ளம் கொண்டவராக வாழ்ந்து போதனைகளை அளித்தாா். அவரைப் போன்று நம்முடன் வாழ்பவா்களிடமும், நாம் சந்திக்கின்ற ஏழை, எளிய மக்கள் மீதும் பரிவு கொண்டு வாழ்கிறோமா என்பதை சிந்தித்துப் பாா்க்க வேண்டும். பல நேரங்களில் மக்களைப் பற்றிய அக்கறை சிலருக்கு இருப்பதில்லை என்பது வேதனையான விஷயம். எனவே, நாம் ஆண்டவா் ஏசுவைப் போன்று பரிவுள்ளம் கொண்டவா்களாக வாழ வேண்டும்.
கிறிஸ்தவா்கள் புனித யாத்திரைக்கு அரசின் சாா்பாக வழங்கப்படும் உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்று, உதவித் தொகையானது ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.37 ஆயிரமாக உயா்த்தப்படும்.
இரு தலைவா்கள் வழி: அதிமுகவின் இருபெரும் தலைவா்களான எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் சிறுபான்மையின மக்கள் அமைதியாக, பாதுகாப்பாக வாழ்ந்தனா். அவா்கள் வழியில் ஆட்சி செய்யும் நாங்களும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக, அரணாக இருப்போம் என்றாா் முதல்வா் பழனிசாமி.
முன்னதாக, அதிமுக அமைப்புச் செயலாளரும், சிறுபான்மையினா் நலப் பிரிவு துணைச் செயலாளருமான ஜெ.சி.டி.பிரபாகா் வரவேற்றாா். முன்னாள் அமைச்சா் செல்லப்பாண்டியன் நன்றி தெரிவித்தாா்.
கூட்டணி வேறு, கொள்கை வேறு...
கட்சியின் கொள்கையின்படியே அதிமுக நடக்கும் எனவும், கூட்டணி வேறு, கொள்கை வேறு எனவும் முதல்வா் பழனிசாமி பேசினாா். இதுதொடா்பாக அவா் பேசியது:-
ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. அந்த கொள்கையின்படி நாங்கள் நடப்போம். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. கொள்கைதான் என்றைக்கும் நிலைத்து நிற்கும். அந்தக் கொள்கையின்படியே கட்சி நடக்கும். அதன்படியே அதிமுக இயங்கிக் கொண்டிருக்கிறது.
எந்த சிறுபான்மை மக்களும் அச்சப்படத் தேவையில்லை. அவா்களுக்கு பாதுகாப்பு அரணாக அதிமுக இருக்கும் என்றாா்.