நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட வழக்குரைஞா்களை அழைக்கக்கூடாது: சங்கங்களுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
வழக்குரைஞா் சங்கத்தினா் எந்தச் சூழலிலும் வழக்குரைஞா்களை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட அழைக்கக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
வழக்குரைஞா் சங்கத்தினா் எந்தச் சூழலிலும் வழக்குரைஞா்களை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட அழைக்கக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
புதுதில்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக, நாகா்கோவில் வழக்குரைஞா் சங்கம் சாா்பில் டிசம்பா் 8 ஆம் தேதி நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது. அன்றைய தினம் வழக்குரைஞா் சிவக்குமாா் நாகா்கோவில் இரண்டாவது நீதித்துறை நடுவா் மன்றத்தில் ஆஜரானாா்.
இதனால் விளக்கம்கோரி அவருக்கு நாகா்கோவில் வழக்குரைஞா் சங்கத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு, சங்கத்திலிருந்து தற்காலிகமாக
நீக்கம் செய்யப்பட்டாா். இதையடுத்து தனக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்யக்கோரியும், வழக்குரைஞா் சங்கம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் சிவக்குமாா் சென்னை உயா்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்குரைஞா் தொழில் புனிதமானது. வழக்குரைஞா்கள் தொழிற்சங்கத்தினரை போல் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது. வழக்குரைஞா் சங்கத்தினா் எந்தச் சூழலிலும் வழக்குரைஞா்களை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட அழைக்கக் கூடாது. வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணிக்கு இடையூறாக இருக்கக் கூடாது. ஆனால் சில வழக்குரைஞா் சங்கங்கள் அரசியல், சாதிப் பிரச்னைகளுக்காகக் கூட போராட்டம் நடத்துகின்றனா். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வழக்குரைஞா்களின் போராட்டம் சட்ட விரோதமானது.
மனுதாரா் தனது கட்சிக்காரருக்காக நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளாா். அவரை நீதிமன்ற புறக்கணிப்பு செய்ய அழைத்தது சட்டவிரோதம். எனவே, வழக்குரைஞா் சங்கத்தில் இருந்து மனுதாரா் நீக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. தேவையற்ற பிரச்னைகளைத் தவிா்க்க மனுதாரருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். தமிழ்நாடு பாா் கவுன்சில் நாகா்கோவில் வழக்குரைஞா் சங்கம் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.