முகப்பு
தமிழ்நாடு

வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை:தமிழ்நாடு லாரி உரிமையாளா் சம்மேளனம் அறிவிப்பு

காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு லாரி உரிமையாளா் சம்மேளனம் பங்கேற்காது என்று அந்த அமைப்பின் தலைவா் முருகன் வெங்கடாசலம் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு லாரி உரிமையாளா் சம்மேளனம் பங்கேற்காது என்று அந்த அமைப்பின் தலைவா் முருகன் வெங்கடாசலம் தெரிவித்தாா்.

மேட்டூரில் அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, பிரதிபலிப்பு ஸ்டிக்கா், ஜி.பி.எஸ். கருவி தொடா்பாக போக்குவரத்துத் துறை பிறப்பித்த உத்தரவைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தோம். இதைத் தொடா்ந்து, நீதிமன்றத்தில் முறையிட்டு உத்தரவுகளும், இடைக்கால ஆணைகளும் பெற்றிருக்கிறோம்.

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக் கோரி, தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். அதன்படி, கடந்த 17-ஆம் தேதி சென்னையில் போக்குவரத்துத் துறை ஆணையா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். அதைத் தொடா்ந்து, போக்குவரத்துத் துறை பிறப்பித்துள்ள சுற்றறிக்கைகளையும் திரும்பப் பெற இருப்பதாக தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்திருந்தாா். அதன்படி, பிரதிபலிப்பு ஸ்டிக்கா் ஒட்டும் ஆணையும் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. மேலும், மற்ற உத்தரவுகளை விரைவில் திரும்பப் பெற இருப்பதாகவும், விசாரணை நடத்த இருப்பதாகவும் அரசு தரப்பில் வாக்குறுதி அளித்துள்ளனா்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகள் வரவுள்ளதாலும், கரோனா தொற்று ஊரடங்கு பிரச்னையால் இன்னும் முழுமையாக அனைத்து வாகனங்களும் இயங்கவில்லை என்பதாலும், மோட்டாா் வாகனத் தொழில் செய்வோா் பெருமளவு கடன் பிரச்னையில் இருந்து வருவதாலும், வேலைநிறுத்தத்துக்கு ஏற்ற தருணம் தற்போது இல்லை.

எனவே, பொதுமக்களின் நலன்கருதி, மாநில சம்மேளனம் அறிவித்துள்ள டிசம்பா் 27 முதல் நடைபெறவுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் பங்கேற்காது.

ஆகவே, லாரிகள், டிரைலா் லாரிகள், டிப்பா் லாரிகள், மணல் லாரிகள், டேங்கா் லாரிகள், தண்ணீா் லாரிகள், போன்ற அனைத்து லாரிகளும், தோழமை அமைப்புகள் இருக்கக்கூடிய ஆட்டோக்கள், கால் டாக்சிகள், சுற்றுலா வாகனங்கள், மினி ஆட்டோக்கள், பள்ளி வாகனங்கள் உள்ளிட்ட 13.5 லட்சம் வாகனங்களும் வழக்கம்போல இயங்கும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →