திருவள்ளூரில் கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கிராம உதவியாளர்கள் அனைவருக்கும் வரையறை செய்யப்பட்ட காலமுறை ஊதியம் வழங்குதல் உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின் கோரிக்கை அடையாள அட்டை அணிந்து பணிபுரி
திருவள்ளூர்: கிராம உதவியாளர்கள் அனைவருக்கும் வரையறை செய்யப்பட்ட காலமுறை ஊதியம் வழங்குதல் உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின் கோரிக்கை அடையாள அட்டை அணிந்து பணிபுரிந்தனர்.
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம் வழங்குதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல உள்பட 14 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த மாதம் 17-ஆம் தேதி திருவள்ளூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு வருவாய் கிராம அலுவலர்கள் சங்கம் சார்பில் மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி 3 நாள்கள் மாவட்டம் முழுவதும் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகங்களில் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரியவும் அறிவுறுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட நூலகம் அலுவலகம் எதிரே உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை அடையாள அட்டைகள் அணிந்து பணிக்கு வந்தனர். கிராம உதவியாளர்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்குதல், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், அனைவருக்கும் பொங்கல் போனஸ் நாள் கணக்கில் வழங்குதல், ஜமாபந்தி சிறப்பு படி வழங்குதல், கிராம உதவியாளர் பணியை தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் நியமனம் செய்ய வலியுறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தும் விதமாக பணிக்கு வந்த அனைவரும் கோரிக்கை அட்டை அணிந்து வந்து பணிபுரிந்தனர். இதேபோல், மாவட்டம் முழுவதும் கோரிக்கைகள் குறித்த அடையாள அட்டைகள் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.