கீழமை நீதிமன்றங்களை ஜன. 18 முதல் முழு அளவில் செயல்பட அனுமதிக்க தீர்மானம்
கரோனா தாக்கம் குறைந்ததையடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களை வரும் ஜனவரி 18-ஆம் தேதி முதல் முழு அளவில் செயல்பட அனுமதிப்பது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
சென்னை: கரோனா தாக்கம் குறைந்ததையடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களை வரும் ஜனவரி 18-ஆம் தேதி முதல் முழு அளவில் செயல்பட அனுமதிப்பது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டு, காணொலி காட்சி மூலம், அவசர வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. கரோனா தொற்று பரவல் குறைந்து வருவதைத் தொடர்ந்து, கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய நிர்வாகக் குழு கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களையும் வரும் ஜனவரி 18-ஆம் தேதி முதல் முழு அளவில் செயல்பட அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் காணொலி காட்சி விசாரணையை அனுமதிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்கள் முழு அளவில் செயல்பட துவங்கியுள்ளதால், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி முழு அளவில் கீழமை நீதிமன்றங்களை அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக அந்தந்த மாவட்ட முதன்மை நீதிபதிகள், தங்கள் கருத்துக்களை, வரும் டிசம்பர் 23-ஆம் தேதிக்குள் தெரிவிக்கும்படி சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை தெரிவித்துள்ளது.