மகாராஷ்டிரத்திலிருந்து திருச்சி கொண்டுவரப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள்
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் மகாராஷ்டிரத்திலிருந்து வருகின்றன.
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் மகாராஷ்டிரத்திலிருந்து வருகின்றன.
திருச்சி மாவட்டத்தில், மணப்பாறை, திருவரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி) ஆகிய 9 பேரவை தொகுதிகள் உள்ளன. இந்த 9 தொகுதிகளிலும் 2,535 வாக்குச் சாவடிகள் உள்ளன. வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மகாராஷ்டிரத்திலிருந்து கொண்டுவரப்படவுள்ளன.
இதன் முதல்கட்டமாக 570 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 230 விவிபேட் (வாக்களித்ததை உறுதி செய்யும் இயந்திரம்) இயந்திரங்கள் திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் வந்து சேர்ந்தன. இந்த இயந்திரங்களை அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில், முதல்கட்ட பரிசோதனை செய்து பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சு. சிவராசு முன்னிலையில், அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல, 1,220 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,900 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 4,300 விவிபேட் இயந்திரங்கள் திருச்சிக்கு அடுத்தடுத்து கொண்டுவரப்படவுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.