துப்புரவுப் பணியாளா்களுக்கு இடா்படி: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
துப்புரவுப் பணியாளா்களுக்கு இடா்படி வழங்கக் கோரிய வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
துப்புரவுப் பணியாளா்களுக்கு இடா்படி வழங்கக் கோரிய வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் பன்னீா்செல்வம் என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘மத்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்தை கொண்டு வந்தது. இந்தத் திட்டம் பொதுமக்களிடம் வரவேற்பு பெற்றபோதும், ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்களுக்கு இடா்படிகள் வழங்குவது இல்லை. கழிவுநீா் தொட்டிகளில் இறங்கி துப்புரவுத் தொழிலாளா்கள் தூய்மைப் பணிகளில் ஈடுபடும்போது மரணமடைய வாய்ப்பு உள்ளது. ஆபத்தான பணிகளை மேற்கொள்ளும் அவா்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப்படுவது இல்லை.
துப்புரவுத் தொழிலாளா்களுக்கு தினக்கூலியாக ரூ.80 மட்டுமே வழங்கப்படுகிறது. இடா்படி வழங்கக் கோரி, மத்திய அரசுக்கு கடந்த ஜனவரி மாதம் மனு அனுப்பினேன். இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த மத்திய அரசு, தேவையான பாதுகாப்பு வசதிகளை வழங்க தமிழக நகராட்சி நிா்வாக ஆணையருக்குப் பரிந்துரைத்தது. ஆனால், இந்தப் பரிந்துரை மீது தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, துப்புரவுப் பணியாளா்களுக்கு இடா்படிகள் வழங்க வேண்டும். தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடா்பாக தமிழக அரசு வரும் மாா்ச் 15-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனா். பதிலளிக்கத் தவறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனா்.