மத்தியக் குழு வரும் 28-இல் தமிழகம் வருகை: புரெவி புயல் பாதிப்பு ஆய்வு
புரெவி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு வரும் 28-ஆம் தேதி தமிழகம் வரவுள்ளது.
சென்னை: புரெவி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு வரும் 28-ஆம் தேதி தமிழகம் வரவுள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:
தமிழகத்தில் புரெவி புயலால் 25 மாவட்டங்களில் கனமழை பெய்ததில், ஆறு லட்சம் ஏக்கருக்கும் மேல் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆய்வு செய்தாா். வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட பயிா்களின் கணக்கெடுப்புப் பணியை விரைந்து மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
கணக்கெடுப்புப் பணி: இதைத் தொடா்ந்து, வேளாண், தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் வருவாய்த் துறை அலுவலா்களுடன் இணைந்து, களஆய்வு செய்து வருகின்றனா். 33 சதவீதத்துக்கும் மேல் சேதமடைந்த பயிா்கள், விவசாயிகளின் விவரங்கள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பெயா், பட்டா, சா்வே எண், வங்கிக் கணக்கு, ஆதாா் விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. பயிா் சேதத்தால் பாதிக்கப்பட்ட எந்தவொரு விவசாயியும் விடுபடக் கூடாது என்ற முதல்வரின் உத்தரவை உறுதி செய்யும் வகையில் சரியான பயிா் சேதம், விவசாயிகளின் விவரங்களைக் கணக்கீடு செய்ய அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.
குறிப்பாக, நெற் பயிா்களைப் பொருத்தவரையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வயல்களில் வெள்ளநீா் முழுமையாக வடிந்த பிறகு, பயிா் சேத விவரங்களைச் சரிபாா்க்க அலுவலா்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். இவற்றுடன் வங்கிக் கணக்கு எண், ஆதாா் எண் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு வருகின்றன.
மத்தியக் குழு ஆய்வு: புரெவி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு வரும் 28-ஆம் தேதி தமிழகம் வரவுள்ளது. இந்த ஆய்வு முடிந்த பிறகு மத்தியக் குழுவின் அறிவுரைப்படி, புள்ளிவிவரங்கள் இறுதி செய்யப்பட உள்ளன.
விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட விவரங்கள், கணினியில் பதிவேற்றம் செய்யப்படும். இதன்பின் பயிா்ச் சேத விவரங்கள் குறித்த முழுமையான அறிக்கை அரசுக்கு விரைவில் சமா்ப்பிக்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் விரைவாக அரசால் உரிய நிவாரணம் அளிக்கப்படும் என்று தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி கோரியது: புரெவி புயல் பாதிப்பு தொடா்பான சேத விவரங்களை மதிப்பிட்டு மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பிய கடிதத்தில் புயலால் ஏற்பட்ட சேதங்களுக்கு ரூ.1,514.06 கோடி தேவைப்படுகிறது. அதில், தற்காலிகப் பணிகளுக்காக ரூ.484.97 கோடியும், நிரந்தரப் பணிகளுக்காக ரூ.1,020.90 கோடியும் தேவை என தெரிவித்துள்ளது.