அந்தியூரில் நீர்ப் பாசனத் திட்டங்களை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம்
விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அந்தியூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.
விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அந்தியூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்குக் கட்சியின் மாநில அமைப்பாளர் துரைராஜா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் லோகநாதன் முன்னிலை வகித்தார். ஈரோடு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ஸ்ரீகுமார் வரவேற்றார். கோரிக்கைகளை விளக்கி கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈஆர்.ஈஸ்வரன் சிறப்புரையாற்றினார்.
அந்தியூர் மற்றும் பவானி தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் மேட்டூர் அணையின் உபரி நீர் சேமிப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பர்கூர் மலைப்பகுதியில் இருந்து வீணாகச் செல்லும் தண்ணீரை தடுத்து ஏரி, குளங்களை நிரப்பும் தோனிமடுவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மணியாச்சி வழுக்குப்பாறை திட்டம், வேதபாறை அணை திட்டம் ஆகிய பாசனத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
பவானி ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும். பாரம்பரியமிக்க அந்தியூர் வாரச்சந்தையை இடமாற்றம் செய்வதை நிறுத்த வேண்டும். பூனாச்சியில் உள்ள மரவள்ளிக்கிழங்கு மாவு ஆலையிலிருந்து கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும். விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை ஆப்பக்கூடல் சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகம் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஈரோடு மத்திய மாவட்டச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் கணபதி உள்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.