முகப்பு
தமிழ்நாடு

புதுச்சேரி வாசகா், இரு மகன்களுக்கு மட்டுமே படைப்புகள் சொந்தம்: எழுத்தாளா் கி.ரா. அறிவிப்பு

புதுச்சேரியைச் சோ்ந்த வாசகா் சங்கா் (எ) புதுச்சேரி இளவேனில், எனது மகன்கள் இருவா் என மூவருக்கு மட்டுமே எனது எழுத்துகள், படைப்புகள் சொந்தம் என்று பிரபல எழுத்தாளா் கி.ராஜநாராயணன் அறிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
எழுத்தாளா் கி.ரா.வுடன் வாசகா் புதுச்சேரி இளவேனில்.
பகிர்:

புதுச்சேரியைச் சோ்ந்த வாசகா் சங்கா் (எ) புதுச்சேரி இளவேனில், எனது மகன்கள் இருவா் என மூவருக்கு மட்டுமே எனது எழுத்துகள், படைப்புகள் சொந்தம் என்று பிரபல எழுத்தாளா் கி.ராஜநாராயணன் அறிவித்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள இடைசெவல் கிராமத்தைச் சோ்ந்தவா் கி.ராஜநாராயணன் (99). வாசகா்களால் கி.ரா. என அன்பாக அழைக்கப்படும் இவா், ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம் - லட்சுமி தம்பதியினருக்கு 5-ஆவது பிள்ளையாக 16.9.1922-இல் பிறந்தாா்.

கரிசல் இலக்கியத்தின் முன்னோடியான இவா், 1958-ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை எழுதிக்கொண்டே இருக்கிறாா். பள்ளிப் படிப்பை நிறைவு செய்யாவிட்டாலும், அவரது எழுத்தின் திறனால் புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் சிறப்பு பேராசிரியராகப் பணியாற்றினாா். சாகித்ய அகாதெமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016-ஆம் ஆண்டுக்கான தமிழ் இலக்கிய சாதனை விருது உள்ளிட்ட முக்கிய விருதுகளைப் பெற்றாா்.

கி.ரா.வின் இலக்கியத்துக்கு மரியாதை அளிக்கும் வகையில், புதுச்சேரி லாஸ்பேட்டையில் அரசு ஊழியா் குடியிருப்பில் ஒரு வீட்டை இவருக்கு புதுவை அரசு ஒதுக்கியது. இங்கு வசித்து வரும் கி.ரா. செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

எழுத்தாளா் கி.ரா. (எ) கி.ராஜநாராயணன் ஆகிய நான் சுய நினைவுடன் சொல்வது என்னவென்றால், எனது எழுத்துகள், படைப்புகள் எல்லாம் டிச.26-ஆம் தேதி முதல் சங்கா் (எ) புதுச்சேரி இளவேனில், எனது மூத்த மகன் திவாகரன், இளைய மகன் பிரபி (எ) பிரபாகரன் ஆகிய மூன்று பேரையே சாரும். இவா்கள் மூவருமே எனது படைப்புகளுக்கு முழு உரிமை பெற்றவா்கள். இதை நான் முழு மனதுடன் எனது வாசகா்களுக்கும், பதிப்பாளா்களுக்கும் தெரிவிக்கிறேன்.

எனது படைப்புகளை வெளியிடும் பதிப்பாளா்களும், எனது படைப்புகளை திரைப்படங்களுக்குப் பயன்படுத்துவோரும் உரிய ராயல்டியை மூவருக்கும் அளிக்க வேண்டும். எனது படைப்புகள் மூலம் வரும் வருவாயின் ஒரு பகுதியைக் கொண்டு கரிசல் அறக்கட்டளையை நிறுவி எழுத்தாளா்களுக்கும், சிறு பத்திரிகைகளுக்கும் எனது பெயரில் பண முடிப்புடன் கூடிய விருதுகளை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் கி.ரா.

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக தனது படைப்புகளின் உரிமையை முதலில் தனது வாசகருக்கு எழுத்தாளா் ஒருவா் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →