விதைகள் உள்ளே வைத்து அச்சடிக்கப்பட்ட திருமண அழைப்பிதழ். (வலது)திருமணம் செய்து வைக்கும் பெண் புரோகிதர் பிரம்மரம்ப மகேஸ்வரி. 
தமிழ்நாடு

அழைப்பிதழ் பூக்கும் அதிசயம்!

திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்குப் பல வகையான அழைப்பிதழ்கள் பார்த்திருக்கிறோம். திருக்குறள், சங்க இலக்கியப் பாடல்கள்(குறுந்தொகை) மற்றும் பயன்பாட்டில் உள்ள

இடைமருதூர் கி.மஞ்சுளா

திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்குப் பல வகையான அழைப்பிதழ்கள் பார்த்திருக்கிறோம். திருக்குறள், சங்க இலக்கியப் பாடல்கள்(குறுந்தொகை) மற்றும் பயன்பாட்டில் உள்ள பேச்சுத் தமிழுக்கு இணையான இலக்கியத் தமிழ், இவையெல்லாம் அழைப்பிதழில் அச்சிடப்படுவது வழக்கம். சிலர் அழைப்பிதழ்களையே புத்தகமாக வழங்குவதும் உண்டு. கேட்பரீஸ் சாக்லேட்டுகளில் அழைப்பிதழ், பேனாக்களில் அழைப்பிதழ் என, இன்றைய மணமக்களின் ரசனைக்கு ஏற்ப திருமண அழைப்பிதழ்கள் வெளிவருகின்றன.
 சிலர், திருமண நிகழ்ச்சிகளின் முடிவில், சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்துவதற்காக தாம்பூலப் பையுடன் மரக்கன்றுகளை, பூச்செடிகளை தருவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பலரும் விரும்பி வாங்கி வந்து வளர்க்கின்றனர். அவற்றை வாங்கி, இருசக்கர வாகனங்களிலும், பேருந்துகளிலும் சிரமப்பட்டு தூக்கிச் செல்வதையும் பார்க்க முடிகிறது. இந்தச் சிரமமெல்லாம் இனி யாரும் படவேண்டாம் என்பதற்காக, சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில், அழைப்பிதழையே வித்தியாசமாகத் தயாரித்துத் தங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அளித்திருக்கிறார்கள்.
 சமீபத்தில் சென்னை, முட்டுக்காடு "தக்ஷிணசித்ரா' பாரம்பரிய வரலாற்றுக் கலைக்கூடத்தில் நடந்த "விக்னேஷ்-சுஷ்மா' இணையரின் திருமணத்திற்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழை பூச்சட்டியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, வெயில் படும்படியாக வைத்தாலே போதும்... சில நாள்களில் வளர்ந்து, பூக்கள் பூத்துக் குலுங்கத் தொடங்கிவிடும். திருமணம்தான் முடிந்துவிட்டதே என்று இந்த அழைப்பிதழை யாரும் தூக்கிப் போட்டுவிட முடியாதபடி அதை வடிவமைத்திருக்கிறார்கள்.
 உள்ளேயே விதைகளை மறைவாக வைத்து இந்த அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழைக் கசக்கி சட்டியில் போட்டு, தண்ணீர் ஊற்றினால் போதுமானது. என்ன பூக்கள் பூக்கப்போகிறது என்பது அந்த அழைப்பிதழில் இருக்கும் விதைகளைப் பொருத்தது.
 விக்னேஷ்-சுஷ்மா திருமணத்தில் புதுமை அழைப்பிதழில் மட்டுமல்ல, திருமணம் நடத்தப்பட்ட முறையிலும்கூட. வழக்குரைஞரான மணமகள் சுஷ்மா ஹரிணி, தனது திருமணம் பெண் புரோகிதரால்தான் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்த விருப்பத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள் மணமகன் விக்னேஷ் ராகவன் குடும்பத்தினர். திருமணத்துக்கென்று ஆசாரங்கள் தெரிந்த பெண் புரோகிதரை எங்கே தேடுவது? அதற்கு அவர்களுக்கு விடை மைசூரில் கிடைத்தது. வேதம் படித்த வைதீகரான பிரம்மரம்ப மகேஸ்வரி என்கிற பெண் புரோகிதர் திருமணத்திற்கு மைசூரிலிருந்து வரவழைக்கப்பட்டார். பெண் புரோகிதரால் வைதீகச் சடங்குகள் விக்னேஷ்-சுஷ்மா திருமணத்தில் நடத்தி வைக்கப்பட்டன என்பது மட்டுமல்ல, எல்லா மந்திரங்கள், சடங்குகளுக்கும் அர்த்தங்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் விளக்கவும் பட்டன என்பதுதான் தனிச்சிறப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு

வெல்லும் தமிழ்ப் பெண்கள் வீடு வீடாக பிரசாரம்

அரசுப் பேருந்து மோதி முதியவா் பலி

சமுதாயக் கட்டடம் திறப்பு

ரூ.590 கோடி முறைகேடு: ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் பங்குகள் 20% சரிவு!

SCROLL FOR NEXT