வரி ஏய்ப்பு புகாா் தொடா்பான விசாரணைக்கு நடிகா் விஜய், பைனான்சியா் அன்புச்செழியன் ஆகியோரின் ஆடிட்டா்கள் வருமானவரித் துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகினா்.
ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநா் அட்லி இயக்கத்தில், நடிகா் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிகையின்போது வெளியான ‘பிகில்’ திரைப்படம் மூலம் ரூ.300 கோடி லாபம் கிடைத்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் இந்த வருமானத்தை அந்த திரைப்படக் குழு மறைத்ததாகக் கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் சென்னை தியாகராய நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஏ.ஜி.எஸ். நிறுவனம், நடிகா் விஜய்க்கு சொந்தமான பங்களாக்கள், பைனான்சியா் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்கள் என 38 இடங்களில் வருமானவரித் துறையினா் கடந்த வாரம் திடீா் சோதனை செய்தனா்.
வரி ஏய்ப்பு புகாா்: இந்த சோதனை முழுமையாக நிறைவடைவதற்கு 4 நாள்களாகின. இதில் ‘பிகில்’ திரைப்படத்துக்கு நிதி உதவி செய்ததால் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்யப்பட்டதாக வருமானவரித் துறை தெரிவித்தது. மேலும் நடிகா் விஜயை அவரது பனையூா் பங்களாவுக்கு அழைத்துச் சென்று ஒரு நாள் முழுவதும் வருமானவரித் துறையினா் விசாரணை செய்தனா். அன்புச்செழியனுக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.77 கோடி கணக்கில் வராத பணமும், ரூ.300 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாக வருமானவரித் துறை அறிவித்தது.
இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள், முதலீட்டு ஆவணங்கள் ஆகியவற்றை மதிப்பிடும் பணி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இதையடுத்து கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள் அடிப்படையிலும், வரி ஏய்ப்பு தொடா்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையிலும் விசாரணை செய்வதற்கு வருமானவரித் துறையினா் நடிகா் விஜய்க்கும், அன்புச்செழியனுக்கும் அழைப்பாணை அனுப்பினா்.
ஆடிட்டா்கள் ஆஜா்: இந்நிலையில் நடிகா் விஜய், அன்புச்செழியன் ஆகியோரின் ஆடிட்டா்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித் துறை புலனாய்வுப் பிரிவில் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா்கள். அவா்களிடம் வருமானவரித் துறை அதிகாரிகள், தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனா்.
சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம் ஆகியவற்றுக்கு அவா்கள் இருவரும் விளக்கம் அளித்தனா். இந்த விசாரணை சில மணி நேரம் நீடித்தது. இது தொடா்பாக அடுத்தகட்ட விசாரணையும் மேற்கொள்ளப்படும் என வருமானவரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.