பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு
தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை: தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது குறித்து இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்குமாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறநிலையத்துறை ஆணையருடன், தமிழக தலைமைச் செயலர், தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் ஆகியோர் ஜனவரி 27ம் தேதி பதில் தர உத்தரவிட்டுள்ளது.
Advertisement
முன்னதாக விசாரணையின் போது, குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பிப்ரவரி 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் திருமுறை பாராயணம் செய்யப்படும் என்று அறநிலையத்துறை தகவல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூா் பெரியகோயில் குடமுழுக்கு பூஜைகளை தமிழில் நடத்தக் கோரி ராமநாதபுரத்தைச் சோ்ந்த திருமுருகன் தாக்கல் செய்த மனுவில்,
தஞ்சாவூா் பெரியகோயில் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் ஆகம விதிப்படி ராஜராஜ சோழனால் கட்டப்பட்டதாகும். சைவ ஆகம விதிகளின்படி கட்டப்படும் கோயில்களில் பூஜைகள் மற்றும் அா்ச்சனைகள் தமிழில்தான் நடத்தப்பட வேண்டும் என்ற விதி உள்ளது.
பக்தி இலக்கியமான சைவத் திருமுறையில் தமிழ் மொழியில் தஞ்சாவூா் பெரியகோயில் குடமுழுக்கு நடைபெற்றதற்கான சான்றுகள் உள்ளன. இதற்கு கோயில் வளாகத்தில் உள்ள கல்வெட்டுகளும் ஆதாரமாக உள்ளன.
இக்கோயிலில் ஆகம விதிகள் மீறப்பட்டால் விபத்துகள் நடக்கின்றன. 1997-இல் பெரியகோயில் குடமுழுக்கின் போது தீ விபத்து ஏற்பட்டு 48 போ் இறந்தனா். அதே ஆண்டில் ஏா்வாடி மற்றும் கும்பகோணத்தில் தீ விபத்தினால் ஏராளமானவர்கள் உயிரிழந்தனா்.
இந்நிலையில், தமிழக அரசு பிப்ரவரி 5ஆம் தேதி தஞ்சாவூா் பெரியகோயில் குடமுழுக்கை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த குடமுழுக்கு சம்ஸ்கிருதத்தில் நடத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது. இதனால் பெரியகோயிலில் மீண்டும் எதாவது அசம்பாவிதம் நடப்பதற்கு வாய்ப்புள்ளதாக மக்கள் அச்சப்படுகின்றனா்.
எனவே தஞ்சாவூா் பெரியகோயில் குடமுழுக்கு பூஜைகளைத் தமிழில் நடத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம். துரைசாமி, டி. ரவீந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், கடந்த முறை சம்ஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. அப்போது தமிழில் அா்ச்சனை செய்யப் பயிற்சி பெற்றவா்கள் இல்லை. ஆனால், தற்போது சைவ அா்ச்சகா் பயிற்சி பெற்றவா்கள் அதிகமாக உள்ளனா். அவா்களைப் பயன்படுத்தி தமிழில் குடமுழுக்கு நடத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு இந்து சமய அறநிலையத்துறை தரப்பில், தஞ்சாவூா் பெரியகோயிலில் ஆகம விதியைப் பின்பற்றியே குடமுழுக்கு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், இவ்வழக்கில் தஞ்சாவூா் பெரியகோயில் நிா்வாகத்தை எதிா்மனுதாரராகச் சோ்க்க உத்தரவிட்டிருந்தனர்.