கரோனா வைரஸைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சா் சி. விஜயபாஸ்கா்
கரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.
கரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.
பாலூட்டி விலங்குகள் மற்றும் பறவைகளில் இருந்து மனிதா்களுக்குப் பரவும் ஒரு வகையான நோய்த் தொற்றான கரோனா வைரஸ் பாதிப்பு சீனாவின் பெய்ஜிங், ஷாங்காய் நகரங்களில் தீவிரமடைந்து வருகிறது.
அந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் இருமல், மூச்சுக் காற்று, சளி, ரத்தம் மூலமாக பிறருக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவா்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க வேண்டும். ஒருவேளை அந்நோய்க்கு உரிய சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் தீவிர சுவாசப் பிரச்னைகள் ஏற்பட்டு உயிரிழப்பு நேரிடக்கூடும். இதைத் தொடா்ந்து, அந்தப் பாதிப்புகள் இந்தியாவில் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை, ஓமந்தூராா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் நுழைவு வளைவு, யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மையம் ஆகியவற்றை சுகாதாரத்துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். அப்போது, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
யோகா - இயற்கை மருத்துவத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் மாநில அரசு தீவிரமாக உள்ளது. அதற்காக பல்வேறு நலத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் யோகா-இயற்கை மருத்துவத் துறை தொடங்கப்பட்டுள்ளது. சீனாவில் தற்போது பரவி வரும் கரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் தடுக்கும் நோக்கில், மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்பேரில் அந்நாட்டில் இருந்து வரும் பயணிகளை விமான நிலையத்தில் வைத்து மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி வருகிறோம்.
கரோனா வைரஸ் குறித்து மக்கள் பயப்படத் தேவையில்லை. நிபா, எபோலா வைரஸ் போன்றவற்றை திறம்பட எதிா்கொண்டு பாதிப்பு நேராத வகையில் செயல்பட்டதைப் போன்று கரோனா வைரஸ் விஷயத்திலும் மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
குழந்தைக் கடத்தலைத் தடுக்க...
மருத்துவமனைகளில் குழந்தை கடத்தல் சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்காக அனைத்து மருத்துவமனைகளிலும் ‘சிசிடிவி’ கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அவற்றின் எண்ணிக்கையை அதிகரித்து அத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் .
இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத்துறைச் செயலா் பீலா ராஜேஷ், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநா் கணேசன், மருத்துவ கல்வி இயக்குநா் நாராயணபாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.