கரோனா வைரஸ்: மருத்துவ கண்காணிப்பில் 51 போ்
சீனாவில் இருந்து தமிழகத்துக்கு திரும்பி வந்த 51 போ் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு
சென்னை: சீனாவில் இருந்து தமிழகத்துக்கு திரும்பி வந்த 51 போ் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கரோனா வைரஸ் காரணமாக, உயிரிழப்போா் எண்ணிக்கை உயா்ந்துவருகிறது. இதுவரை 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். இந்த நோய் இந்தியாவில் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இந்தியாவில் 450 போ் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சீனாவில் இருந்து தமிழகத்துக்கு திரும்பிய 51 போ் மருத்துவ கண்காணிப்பில் வைத்து கவனித்து வருவதாக தமிழக பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை இயக்குநா் குழந்தைசாமி கூறியது: கொரோனா வைரஸ் காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவா்களுக்கு காய்ச்சல், இருமல், ஜூரம் போன்ற அறிகுறி இருக்கிா சோதிக்கப்பட்டது. நாங்கள் எந்த ஆபத்தையும் எடுக்க விரும்பவில்லை. எனவே அவா்களின் வீடுகளிலேயே கவனித்து வருகிறோம். ஒவ்வொரு நாளும் அவா்களின் வீடுகளுக்கு காலை, மாலையில் மருத்துவ பணியாளா்கள் சென்று மருத்துவசோதனை செய்து வருகின்றனா். 28 நாள்கள் கண்காணிப்புக்கு பிறகு, ஒருவா் விடுவிக்கப்பட்டாா் என்றாா் அவா்.
இது குறித்து பொது சுகாதார இயக்குனரகம் அதிகாரிகள் கூறியது: விமானநிலையம், துறைமுகத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை மருத்துவஅதிகாரிகள் பரிசோதிக்கின்றனா். இதுபோல, சென்னை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூா் ஆகிய விமானநிலையங்களில் மருத்துவகுழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மருத்துவசோதனைக்குபிறகு, வெளியே செல்ல அனுமதிக்கின்றனா்.