தமிழ்நாடு

என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து விபத்து: 6 தொழிலாளர்கள் பலி; 17 பேர் தீக்காயம்

DIN

நெய்வேலி: கடலூர் மாவட்டம், நெய்வேலியிலுள்ள என்எல்சி இந்தியா நிறுவன அனல் மின் நிலையத்தில் புதன்கிழமை கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். 17 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர்.

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2-ஆவது அனல் மின் நிலையத்தின் 5-ஆவது அலகில் புதன்கிழமை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென கொதிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 17 தொழிலாளர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
 

இதுகுறித்து தகவலறிந்த மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தி, மீட்புப்பணியில் ஈடுபட்டனர். 

விபத்தில் இறந்த தொழிலாளர்கள்:
பத்மநாபன் - மேலக்குப்பம், வெங்கடேசப் பெருமாள் - கல்லமேடு, சிலம்பரசன் -  பெரியகாப்பான்குளம், அருண்குமார் - கொள்ளிருப்பு, ராமநாதன் - அத்திரி குப்பம், நாகராஜ் - நெய்வேலி நகரியம்.

இந்த விபத்தில் ரவிச்சந்திரன் (43), சுரேஷ்(50), சிவக்குமார் (53), வைத்தியநாதன் (48),ஜோதிராமலிங்கம், கே.ரவிச்சந்திரன் (இவர்கள் அனைவரும் நிரந்தரத் தொழிலாளர்கள்), இளங்கோ, செல்வகுமார் (23), செல்வராஜ், செங்கோலை, ஜெயசீலன்(55), அனந்தபத்மநாபன்(50), மணிகண்டன், வேல்முருகன், கோவிந்தன்(43), மோகன்ராஜ் (25), வெங்கடேசன்(ஒப்பந்தத்தொழிலாளர்கள்) ஆகிய 17 தொழிலாளர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர். இவர்களில் மோகன்ராஜ் என்எல்சி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற அனைவரும் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த தொழிலாளர்களின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

தொடரும் விபத்துக்கள்...

2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9-ஆம் தேதி அனல் மின் நிலையம் 2, 6-ஆவது அலகில் நடைபெற்ற விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் காயமடைந்தார். கடந்த மே மாதம் 7-ஆம் தேதி இதே அலகில் நடைபெற்ற விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 2 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில், இதே அனல் மின் நிலையத்தின் 5-ஆவது அலகில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாகினர். 15 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயம் அடைந்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

SCROLL FOR NEXT