கோவையில் காதலன் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த கல்லூரி மாணவி பலி
கோவையில் பேரூர் செட்டிப்பாளையம் பகுதியில் ஐஸ்வர்யா என்ற பெண்ணை அவரது காதலன் குத்தியதில், சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்.
கோவை: கோவையில் பேரூர் செட்டிப்பாளையம் பகுதியில் ஐஸ்வர்யா என்ற பெண்ணை அவரது காதலன் குத்தியதில், சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்.
ஆறுமுக கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியான ஐஸ்வர்யா, அதே பகுதியைச் சேர்ந்த ரத்தீஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனை ஐஸ்வர்யாவின் தந்தை கண்டித்துள்ளார். இதனால் ஐஸ்வர்யா சில நாள்களாக ரத்தீஷுடன் பேசாமல் இருந்துள்ளார்.
காதலிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த ரத்தீஷ், வெள்ளிக்கிழமை இரவு ஐஸ்வர்யாவின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது ரத்தீஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, இதில் ரத்தீஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த ஐஸ்வர்யாவைக் குத்தியுள்ளார். இதைத் தடுக்க வந்த அவரது தந்தை சக்திவேலுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
Advertisement
பலத்த காயமடைந்த ஐஸ்வர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய ரத்தீஷை தேடி வருகிறார்கள்.