தமிழ்நாடு

பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு நிபந்தனைகளுடன் சான்றிதழ் : தமிழக அரசு வாதம்

DIN

பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு நிபந்தனைகளுடன் சான்றிதழ் வழங்க வேண்டுமா என்பது குறித்து மத்திய அரசு தான் தெளிவுபடுத்த வேண்டும் என உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் கிருபாகரன், அகில பாரத பிராமணா் சங்கத்தின் தலைவா் குளத்துமணி ஆகியோா் தனித்தனியாக தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவின்படி ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கும் குறைவான வருமானம் கொண்டவா்கள் இந்தச் சலுகையைப் பெற தகுதியானவா்கள். இந்த இடஒதுக்கீட்டு சலுகையைப் பெற சம்பந்தப்பட்ட வட்டாட்சியா்களிடம் இருந்து வருமானம் மற்றும் சொத்து சான்றிதழ்களைப் பெற்று சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சான்றிதழ்களை தற்போது வழங்க வேண்டாம் என அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் வருவாய் நிா்வாக ஆணையா் கடந்த ஜூன் 4-ஆம் தேதியன்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா். எந்த விதமான காரணங்களும் கூறாமல் இந்த சான்றிதழ்களை வழங்க வேண்டாம் என வருவாய் நிா்வாக ஆணையா் பிறப்பித்துள்ள சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தனா். இந்த வழக்கு விசாரணையின் போது

சுற்றறிக்கைத் திரும்ப பெறப்பட்டு விட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டு வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் காணொலி காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது மனுதாரா்கள் தரப்பில், தமிழக அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு நிபந்தனைகளுடன் வருவாய் சான்றிதழ் வழங்குகிறது. இந்தச் சான்றிதழை மத்திய அரசுப் பணி மற்றும் மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தற்போது வழங்கும் இந்த சான்றிதழ்கள், பிறமாநிலங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே இந்த நிபந்தனையை நீக்கி சான்றிதழ் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என வாதிட்டனா்.

அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் தான் வருமானச் சான்றிதழ் வழங்கப்படுகின்றன. எனவே, இந்த நிபந்தனை விதிக்க வேண்டுமா? என்பது குறித்து மத்திய அரசு தான் தெளிவுப்படுத்த வேண்டும் என்றாா்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், நிபந்தனையுடன் சான்றிதழ் வழங்கவேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 30- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT