முகப்பு
தமிழ்நாடு

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடைமையானது: தமிழக அரசு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடைமையானதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:00 PM
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடைமையானது: தமிழக அரசு
பகிர்:


தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடைமையானதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தில் முதல்வரின் முகாம் அலுவலகம் எதுவும் அமைக்கப்படாது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லை என்பதால், முகாம் அலுவலகம் எதுவும் அமைக்கப்படாது என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

வேதா இல்லத்தை நினைவில்லமாக்க, நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான இழப்பீட்டுத் தொகையை சென்னை குடிமையியல் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தியைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு, நிலம் கையகப்படுத்துவதற்கான இழப்பீடாக தமிழக அரசு ரூ.68.9 கோடியை செலுத்தியுள்ளது.

போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது அண்ணன் மகன் மற்றும் மகள் வழக்குத் தொடர்ந்திருக்கும் நிலையில், நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான இழப்பீட்டுத் தொகையை சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தி உள்ளது.

24,322 சதுர அடி பரப்பளவு கொண்ட வேதா நிலையத்துக்கு இழப்பீடாக ரூ.68.9 கோடியை தமிழக அரசு நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக செலுத்தியுள்ளது. இதில், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கித் தொகையை செலுத்த ரூ.36.9 கோடியும், ஜெயலலிதாவின் வாரிசுகளுக்கு இழப்பீடு வழங்க 29.3 கோடியும் செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவதற்காக தமிழக அரசு கடந்த மே மாதம் பொது அறிவிக்கை வெளியிட்டு நடவடிக்கை எடுத்தது.

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016-ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதையடுத்து அவர் வாழ்ந்த சென்னை போயஸ் தோட்ட பகுதியில் உள்ள “வேதா நிலையம்” இல்லத்தை நினைவில்லமாக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது. இந்நிலையில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவதற்காக தமிழக அரசு பொது அறிவிக்கை வெளியிட்டது.

இந்த நிலையில் சென்னை உயா் நீதிமன்றத்தில் போயஸ் காா்டன் மற்றும் கஸ்தூரி எஸ்டேட் வீட்டு உரிமையாளா்கள் சங்கத்தினா், மறைந்த முதல்வா் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதை எதிா்த்து வழக்குத் தொடா்ந்தனா். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கையை தமிழக அரசு கடந்த 2017-ஆம் ஆண்டே தொடங்கி விட்டது. அந்தப் பகுதியில் வசிப்பவா்களின் கருத்தை தெரிவிக்கவும் அழைக்கப்பட்டுள்ளனா். அவா்கள் தெரிவித்த ஆட்சேபணைகளும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. மேலும் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை பாா்க்க நாள்தோறும் பொதுமக்கள் அதிகமாக வருவா். இதனால் தங்களுக்கு இடையூறு ஏற்படும் என மனுதாரா் தரப்பில் அச்சப்படுகின்றனா். அதேநேரத்தில் மனுதாரா் தரப்பு எதிா்ப்பையும் பரிசீலிப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எனவே போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் அரசின் நடவடிக்கையில் தலையிட முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

1967ஆம் ஆண்டு இந்த போயாஸ் தோட்ட நிலம் வாங்கப்பட்டு 1972ஆம்ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  அங்கு வேதா இல்லம் என்ற வீட்டைக் கட்டி குடியேறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.