டாஸ்மாக் கிடங்கு மேலாளரை கண்டித்து நாமக்கல்லில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் திடீர் போராட்டம்
நாமக்கல்லில் டாஸ்மாக் கிடங்கு மேலாளரைக் கண்டித்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் திங்கள்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்லில் டாஸ்மாக் கிடங்கு மேலாளரைக் கண்டித்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் திங்கள்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு வாணிபக் கழகம்(டாஸ்மாக்) மாவட்ட மேலாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மாவட்டத்திலுள்ள சுமார் 190 கடைகளுக்கு மது புட்டிகள் லாரிகளில் அனுப்பி வைக்கப்படும். லாரிகளில் மதுபானங்கள் அடங்கிய பெட்டிகளை ஏற்றி, இறக்குவதற்கான சுமை தூக்கும் தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 1-ஆம் தேதி டாஸ்மாக் கிடங்கு மேலாளராக பொறுப்பேற்ற குப்புசாமி என்பவர் தொழிலாளர்களிடம் மிகவும் கெடுபிடியாக நடந்து கொள்வதாகவும், லாரிகளில் சரக்கு எடுத்து வருபவர்கள் வழங்கும் இனாம் தொகையை தன்னிடம் வழங்குமாறு அவர் வற்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் கிடங்கு மேலாளருக்கும், சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை மீண்டும் இரு தரப்புக்கும் இடையே மோதல் எழுந்ததால் தொழிலாளர்கள் அனைவரும் பணியை புறக்கணித்து டாஸ்மாக் அலுவலகம் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட மேலாளர் பண்டரிநாதன், சுமைதூக்கும் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பெருமாள், முனியப்பன் ஆகியோரை அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியைத் தொடர்ந்து தொழிலாளர்கள் அனைவரும் பணிக்குத் திரும்பினர்.