விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியில் குடும்ப பிரச்னையால் கிணற்றில் குதித்த சிறுமியைப் போராடி மீட்ட தீயணைப்புத்துறையினர் தலையில் பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்
அருப்புக்கோட்டை செம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அடைக்கலம் முத்துக்காளை தம்பதியரின் மகள் வளர்மதி(16). அடைக்கலம் இறந்து விட்டதால் முத்துக்காளை அக்கம்பக்கத்தில் உள்ள தோட்டத்தில் பூ பறிக்கும் வேலை செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திய வளர்மதியும் தனது தாயோடு பூ பறிக்கும் பணிக்குச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் வழக்கம் போல் இன்று முத்துக்காளை தனது மகள் வளர்மதியை பூ பறிக்க அழைத்த போது ஏதேதோ காரணம் கூறி வர மறுத்துள்ளார். இதனால் முத்துக்காளை வளர்மதியை திட்டியதாகக் கூறப்படுகிறது. அப்போது திடீரென யாரும் எதிர்பாராத விதமாக வளர்மதி ஓடிச்சென்று அருகில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார். கிணற்றில் தண்ணீர் குறைவாக இருந்ததால் குதித்த வேகத்தில் பாறையில் மோதி தலையில் பலத்த காயமடைந்த சிறுமி கிணற்றுக்குள்ளேயே உயிருக்கு போரடி கொண்டிருந்தார்.
செய்வதறியாது தவித்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அருப்புக்கோட்டை தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கயிற்றைக் கட்டி கிணற்றில் இறங்கி உயிருக்குப் போரடிக்கொண்டிருந்த வளர்மதியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த அருப்புக்கோட்டை தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குடும்ப பிரச்னையால் தற்கொலை செய்ய முயன்றரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.