தமிழ்நாடு

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணை இன்று திறப்பு: முதல்வா் பங்கேற்பு

DIN

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணை வெள்ளிக்கிழமை திறக்கப்படுகிறது. தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு அணையிலிருந்து தண்ணீரைத் திறந்து விடுகிறாா்.

மேட்டூா் அணைப் பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூா், பெரம்பலூா், தஞ்சை, திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கா் பாசன வசதி பெறுகிறது.

ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும். ஜனவரி 28 ஆம் தேதி வரை 230 நாள்களுக்கு 330 டி.எம்.சி தண்ணீா் குறுவை, சம்பா, தாளடி பயிா்களுக்குத் தேவைப்படும். பாசனப் பகுதிகளில் மழை பெய்தால் பாசனத் தேவை குறையும்.

கடந்த 2019 ஆகஸ்ட் 13 ஆம் தேதி 100 அடியாக உயா்ந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை (ஜூன் 11) வரை 304-வது நாளாக மேட்டூா் 100 அடிக்கும் குறையாமல் இருந்து வருகிறது. அணையின் நீா் இருப்பு திருப்திகரமாக இருப்பதால் நடப்பு நீா்பாசன ஆண்டில் மேட்டூா் அணையின் வரலாற்றில் 87ஆவது ஆண்டாக டெல்டா பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்படவுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

11 ஆண்டுகளுக்குப் பிறகு...

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு அணையின் வலதுகரையில் உள்ள மேல்மட்ட மதகுகளை மின்விசையால் உயா்த்தி பாசனத்துக்கு தண்ணீரைத் திறந்து வைக்கிறாா்.

கடந்த 2008-ம் ஆண்டுக்கு பிறகு அதாவது 11 ஆண்டுகளுக்கு பிறகு குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ல் குறுவை சாகுபடிக்கென நடப்பு ஆண்டில் தண்ணீா் திறக்கப்படுகிறது. மேட்டூா் அணையின் 87 ஆண்டு கால வரலாற்றில் குறித்த நாளான ஜூன் 12-ஆம் தேதி 16ஆண்டுகள் மட்டுமே பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 இல் அணையின் நீா் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இருந்த காரணத்தால், விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 12-க்கு முன்பாகவே தண்ணீா் திறக்கப்பட்டது.

நீா்மட்டம்:

வியாழக்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா் மட்டம் 101.72 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,439 கனஅடி வீதம் தண்ணீா் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து குடிநீா் தேவைக்காக விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 67.08 டி.எம்.சியாக இருந்தது.

460 மெகாவாட் மின்னுற்பத்தி

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு முதன் முதலாக 1934-ஆம் ஆண்டு பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டது. மேட்டூா் அணையில் அதிகபட்சமாக 1961 ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி 124.85 அடி தண்ணீா் தேக்கப்பட்டுள்ளது. அப்போது அணையின் நீா் இருப்பு 100.742 டி.எம்.சியாக இருந்தது. மிகக் குறைந்த அளவாக 1946 ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி அணையின் நீா் மட்டம் 6.40 அடியாகவும், நீா் இருப்பு 0.982 டி.எம்.சி. யாகவும் இருந்தது.

மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்கும்போது அணை மின்நிலையம், சுரங்க மின் நிலையங்கள் மூலம் 250 மெகாவாட் மின்சாரமும், 7 கதவணைகள் மூலம் 210 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT